Putin-Kim meeting - US looks shocked

புதின் – கிம் சந்திப்பு: அதிர்ச்சியில் அமெரிக்கா?

இந்தியா

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையிலான சமீபத்திய சந்திப்பு, அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

அரசு முறைப் பயணமாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷ்யாவுக்குக் கடந்த 13ஆம் தேதி சென்றார். தனது குண்டு துளைக்காத ரயிலில் அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் இருக்கும் வோஸ்டோச்னி காஸ்மோட்ரோம் விண்வெளி நிலையத்தை அடைந்தார். அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு நடந்தது. பிறகு ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷெய்குவை நேரில் சந்தித்தார் கிம்.

அப்போது ரஷ்யாவின் அணுசக்தி ஆயுதங்கள் குறித்துக் கேட்டறிந்தார். அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஹைபர்சோனிக் ஏவுகணை, Tu-160, Tu-95, Tu-22M3 விமானங்கள், அணுசக்தி திறன்கொண்ட குண்டுகளை வீசக்கூடிய விமானங்கள் போன்றவற்றையும் அவர் பார்வையிட்டார். தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி தனது பயணத்தை முடித்துக்கொண்டு வடகொரியாவுக்குத் திரும்பினார் கிம். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையிலான இந்தச் சந்திப்பு, அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

ஒருபுறம் ஐக்கிய நாடுகள் விதித்திருக்கும் பல்வேறு பொருளாதாரத் தடைகளால் உணவு, எரிபொருளுக்கு வடகொரியாவில் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. மறுபுறம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரஷ்யா, உக்ரைனுக்கு இடையே போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் ராணுவ உதவி செய்து வருவதால், போர் முடிவுக்கு வரவில்லை. இதனால் ரஷ்யாவுக்குப் பெரும் பொருளாதார இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. எனவே, இருவருக்கும் பொது எதிரியாக அமெரிக்கா இருக்கிறது. இதற்கிடையில் இரு தலைவர்களுக்கும் இடையில் நடந்திருக்கும் இந்தச் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சர்வதேச அரசியல் நோக்கர்கள், “கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ரஷ்யாவுக்குச் சென்ற கிம்மின் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தச் சந்திப்பின்போது ஆயுத ஒப்பந்தங்கள் முடிவாக இருப்பதாகத் தகவல்கள் கிடைத்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. ஆனால் ரஷ்யாவும் வடகொரியாவும் இதை ஒப்புக் கொள்ளவில்லை. இரு நாடுகளும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளால் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன.

எனவே, வரும் காலத்தில் ஆயுதப் பரிமாற்றம் செய்துகொள்வது குறித்தும், ராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்தும் இரு தலைவர்களும் பேசியிருக்கிறார்கள். குறிப்பாக வடகொரியா செயற்கைக்கோள்களை ஏவும் முயற்சியில் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறது. எனவே, தங்களுக்கு அந்த விஷயத்தில் ரஷ்யா உதவ வேண்டும் என விரும்புகிறது அந்த நாடு. பதிலுக்கு அதிக அளவில் தங்களிடம் இருக்கும் ஏராளமான அணு ஆயுதங்களையும், வெடி மருந்துகளையும் ரஷ்யாவுக்கு வழங்க முடியும் என வடகொரியா நம்புகிறது. இதை கிம்மின் பேச்சின் மூலமாகவே நாம் அறிந்துகொள்ள முடியும்.

அவர், `ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் கூட்டாக இருப்போம். ரஷ்யாவின் இறையாண்மையைப் பாதுகாக்க, ஆதிக்க சக்திகளுக்கு எதிரான புனிதப்போரை ரஷ்யா முன்னெடுத்திருக்கிறது. புதினின் அனைத்து முடிவுகளையும் வடகொரியா ஆதரிக்கிறது’ எனத் தெரிவித்திருக்கிறார். பதிலுக்கு ரஷ்யாவும், `வடகொரியா மீது ஐக்கிய நாடுகளின் தடைகள் இருந்தாலும், அவை ரஷ்யா-வடகொரியா இடையிலான உறவை எந்த வகையிலும் தடுக்காது’ எனத் தெரிவித்திருக்கிறது. இது சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஏற்கெனவே அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்போவதாக வடகொரியா அச்சுறுத்தி வருகிறது. இதற்கிடையில்தான் கிம் – புதின் இடையேயான சந்திப்பு நடந்திருக்கிறது. இதில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ராணுவ ஒத்துழைப்புக்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் ரஷ்யாவுக்குச் செல்லும் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரை அடுத்த வாரம் சந்திக்கிறார். இது மேலும் பரபரப்புக்கு வித்திட்டிருக்கிறது. இது அமெரிக்காவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது” என்கின்றனர்.

ராஜ்

விஜய் ஆண்டனி மகள் இறுதிச்சடங்கு எப்போது?

POCO M6 PRO: பட்ஜெட்டில் பக்காவான 5G ஸ்மார்ட் போன்!

பழனி முருகன் கோயிலில் செல்போனுக்கு தடை!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *