புதுச்சேரி மின் துறை ஊழியர்கள் போராட்டம் வாபஸ்!

இந்தியா

புதுச்சேரியில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மின் துறை ஊழியர்கள் இன்று (அக்டோபர் 3) தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்கும் வகையில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த மாதம் 28ம் தேதி முதல் அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் 1ம் தேதி, துணை மின்நிலையங்களில் புகுந்த போராட்ட கும்பல், மின் இணைப்புகளை துண்டித்ததால் மாநிலமே இருளில் மூழ்கியது.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

தொடர்ந்து அவசரமாக களம் இறங்கிய, மின் துறை நள்ளிரவு முழுவதும் பணியாற்றி மின் இணைப்புகளை சரி செய்தனர்.

இதேபோல், நேற்றும் (அக்டோபர் 2) 5வது நாளாக மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

அதனால், பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. அந்தந்த பகுதியில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். மின்வினியோகம் பாதிக்காமல் இருக்க, ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும், ஓய்வு பெற்ற மின் ஊழியர்களைப் பணிக்கு வர அழைப்புவிடுக்கப்பட்டது.

அங்கு நிலவும், அசாதாரண சூழலை தொடர்ந்து துணை மின்நிலையங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க ஒரு கம்பெனி மத்திய அரசின் அதிவிரைவு அதிரடிப்படை வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் நேற்று பல குழுக்களாக பிரிந்து புதுச்சேரி நகரப் பகுதிகளை ஆய்வு செய்தனர். துணை மின்நிலையங்களில் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அரசின் அவசர அழைப்பை ஏற்று, புதுச்சேரிக்கு வந்துள்ள மத்திய பவர் கிரிட் அதிகாரிகள் 24 பேர், துணை மின்நிலையங்களின் தானியங்கி பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

அதேநேரத்தில், போராட்டத்தில் குதித்த மின் துறை ஊழியர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அதில், ”ஊழியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏற்கனவே ஐந்து நாட்கள் மின் துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் சூழ்நிலையில், இன்றுக்குள் (அக்டோபர் 3) பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்க மின் துறை தயாராகி வருகிறது.

முதற்கட்டமாக தொழிலாளர் தகராறுகள் சட்டத்தின் கீழும், அடுத்து எஸ்மா சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது” என எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இன்று மின் துறை ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

முதல்வர் ரங்கசாமி, தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், சுமுக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து மின் துறை ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை இன்று வாபஸ் பெற்றுள்ளனர்.

அத்துடன், இன்றே பணிக்கு திரும்புவதாகவும் முதல்வர் ரங்கசாமியிடம் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

ஜெ.பிரகாஷ்

உளவுத் துறை எச்சரிக்கை : பாதுகாப்பு வளையத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்!

முத்துராமலிங்கர் தங்கக்கவசம் யாருக்கு?: எடப்பாடி -பன்னீர் மோதல்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.