ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து பி.எஸ்.எஸ்.எல்.வி-சி55 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
தகவல் தொடர்பு, தொலையுணர்வு, வழிகாட்டி செயற்கைக்கோள் திட்டங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயல்படுத்தி வருகிறது. பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி வருகிறது இஸ்ரோ.
இதில், பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ, ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ, எஸ்.எஸ்.எல்.வி மூலம் 500 கிலோ வரையிலான எடை அளவிற்கு செயற்கைக் கோள்கள் புவியின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது.
மேலும் இஸ்ரோ வணிக ரீதியில் அவ்வப்போது செயற்கை கோள்களையும் ஏவி வருகிறது. அந்த வகையில் டெலியோஸ்-2 மற்றும் லூமிலைட்-4 எனும் 2 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைக்கப்பட்டது.
இந்த ராக்கெட் இன்று திட்டமிட்டபடி ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து மதியம் 2.19 மணிக்கு பி.எஸ்.எல்.வி-சி55 ராக்கெட் அனல் பறக்க வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதனை இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்கள் கைதட்டி உற்சாகமாக கொண்டாடினர்.
மேலும், ஏராளமான மக்கள் ராக்கெட் சீறி பாய்ந்து விண்ணில் பாய்ந்ததை சுட்டெரிக்கும் வெயிலிலும் நேரடியாக வந்து கண்டனர்.
சிங்கப்பூரின் 2 செயற்கைக்கோள்கள் மூலம் பூமி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்பட பல்வேறு பணிகளுக்குத் தகவல்களை பெற முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான டெலியோஸ்-1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
சூரத்தை தொடர்ந்து பாட்னா: மீண்டும் நீதிமன்றம் முன் நிற்கும் ராகுல்காந்தி