திருப்பதியில் இதற்கு முந்தைய சந்திரபாபு நாயுடு ஆட்சியின்போது ஆந்திர சுற்றுலாத் துறையின் தேவலோகம் திட்டத்துக்காக 20 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டிருந்தது. அந்த நிலத்தை, ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மும்தாஜ் என்ற பெயரில் ஹோட்டல் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இந்த ஹோட்டல் 100 அறைகளுடன் ஐந்து நட்சத்திர வசதிகளுடன் அமையவிருந்தது. அதோடு, டிரிடன்ட் என்ற பிராண்டின் பெயரில் தனியாக 25 அறைகள் கொண்ட ஹோட்டலும் அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ரூ.250 கோடி மதிப்பீட்டில் இந்த ஹோட்டல்கள் கட்டப்படவிருந்தன. 2027 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வருவதாக இருந்தது.
இதற்கிடையே, திருப்பதி திருமலை தேவசம் போர்டு மும்தாஜ் ஹோட்டலுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து நிலத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருமலையில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் அமைந்தால் அசைவம் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்படும் என்பது அவர்களின் முக்கிய குற்றச்சாட்டு. ஆனாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், திருப்பதியில் அர்ச்சகர்கள் இன்று ( பிப்ரவரி 12 ) முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இது குறித்து திருப்பதி திருமலை தேவசம் போர்டு தலைவர் பி.ஆர். நாயுடு கூறுகையில், ‘திருப்பதி பாலாஜி கோவிலுக்கு செல்லும் பாதையில் மும்தாஜ் என்ற பெயரில் ஹோட்டல் இருந்தால் இந்துக்கள் சென்டிமென்டாக பாதிக்கப்படுவார்கள். கோவிலுக்கு மிக அருகில் இந்த ஹோட்டல் அமைகிறது. எனவே, இதை இந்துக்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டோம்’ என்கிறார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆந்திர சுற்றுலாத்துறை மும்தாஜ் ஹோட்டல் நிறுவனத்துக்கு 94 ஆண்டுகளுக்கு இந்த நிலத்தை குத்தகைக்கு கொடுத்துள்ளது. இதில், 4 ஆண்டுகள் கட்டுமான பணிக்காலம் போக மீதி 90 ஆண்டுகள் ஹோட்டலை மும்தாஜ் ஹோட்டல் நிறுவனம் நடத்தும். 2027 ஆம் ஆண்டு 100 அறைகள் கொண்ட மும்தாஜ் ஹோட்டலும் 2030 ஆம் ஆண்டு 25 அறைகள் கொண்ட டிரிடன்ட் ஹோட்டலும் பயன்பாட்டுக்கு வருவதாக இருந்தது. பார், ரெஸ்டாரென்ட் , நீச்சல்குளம் உள்ளிட்ட பல வசதிகளுடன் இந்த ஹோட்டல் கட்டப்படவிருந்தது.
தற்போது, திருப்பதியில் அர்ச்சகர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியிருப்பதால், சந்திரபாபு நாயுடு அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.