உரிமை மீறல் நோட்டீஸ் தொடர்பாக மக்களவையில் ராகுல் காந்தி ஆதாரத்துடன் விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
பிரதமர் மோடி குறித்து உறுதிப்படுத்தப்படாத, அவதூறான கருத்துகளை அவையில் கூறியதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மீது மக்களவை சபாநாயகரிடம் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியிருந்தார்.
அதன் மீது பதிலளிக்க உத்தரவிட்டு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடந்த 7 ஆம் தேதி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
பதில் அறிக்கை தாக்கல் செய்ய வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்று நள்ளிரவு முடிவடைந்த சூழலில், உரிமை மீறல் நோட்டீஸ் மீதான ராகுல் காந்தியின் விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து பின்னர் விரிவான பதில் சீலிட்ட கவரில் வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
பதில் அறிக்கையில், பிரதமர் மோடி மற்றும் தொழிலதிபர் கௌதம் அதானி இடையேயான தொடர்புகளை உறுதி படுத்தும் ஆவணங்கள் இருப்பதை ராகுல் காந்தி உறுதி படுத்தியுள்ளார்.
மக்களவை சபாநாயகர் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் ஆதார ஆவணங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் ராகுல்காந்தி தான் வழங்கியுள்ள பதில் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட தனது பேச்சின் பகுதிகளை மீண்டும் இணைக்க வேண்டும் எனவும் ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.
ராகுலின் பதில் அறிக்கையை மக்களவை செயலகம் ஆராய்ந்து பின்னர் சபாநாயகரின் பார்வைக்கு அனுப்பி அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கலை.ரா
அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணி: தேவையான தகுதிகள் என்ன?
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: முக்கிய குற்றவாளி கைது!