கர்நாடகாவின் மணிப்பால் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில், முஸ்லிம் மாணவனை வகுப்பில், `தீவிரவாதி’ என்று சொன்ன பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள மணிப்பால் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (எம்.ஐ.டி), வகுப்பில் முஸ்லிம் மாணவனை பேராசிரியரொருவர் `தீவிரவாதி’ என்று கூறிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
கடந்த வெள்ளிக்கிழமை அந்த நிறுவனத்தின் பேராசிரியர் ஒருவர் வகுப்பு எடுத்து கொண்டிருந்தார்.
அப்போது, பேராசிரியர் முஸ்லிம் மாணவனிடம் பெயரைக் கேட்டதாக தெரிகிறது. உடனடியாக அந்த மாணவர் தனது பெயரைச்சொன்னதும், “நீங்கள் கசாப் போல இருக்கிறீர்கள்” என்று பேராசிரியர் சொன்னதாக கூறப்படுகிறது.
அதாவது, 2008ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்குதலில் (உயிருடன் பிடிபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் கசாப், பின்னர் தூக்கிலிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது). ஈடுபட்ட கசாப்பை நினைவுபடுத்தும் வகையில், அந்த மாணவரை தீவிரவாதி என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த மாணவர், ஒரு பயங்கரவாதியுடன் ஒப்பிட்டு தனது மதத்தை இழிவுபடுத்தியதாக குற்றம் சாட்டி விவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் மாணவனைத் தன் மகன் போன்றவரென்றும், இதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் பேராசிரியர் அவரிடம் தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து பேராசிரியரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய மாணவன், ”26/11 தாக்குதல் வேடிக்கையான விஷயம் அல்ல. இந்த நாட்டில் முஸ்லிமாக இருந்து ஒவ்வொரு நாளும் இதை எதிர்கொள்வது வேடிக்கையானது அல்ல.
உங்கள் மகனிடம் இப்படிப் பேசுவீர்களா… அவரைத் தீவிரவாதி என்ற பெயரால் நீங்கள் அழைப்பீர்களா… இதுவொரு வகுப்பறை, ஒரு பேராசிரியராக நீங்கள் கற்பிக்கிறீர்கள். நீங்கள் என்னை அப்படி அழைக்க முடியாது” எனப் பேசுகிறார்.
இந்த வீடியோ வைரலாக, இணையவாசிகள் பலரும் பேராசிரியருக்கெதிராகக் கண்டனத்தை தெரிவித்துவருகின்றனர். அதையடுத்து இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்த கல்வி நிறுவனம், சம்பந்தப்பட்ட ஆசிரியரைப் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது.

இது குறித்து பேசிய மணிப்பால் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் மக்கள் தொடர்பு இயக்குநர் எஸ்.பி.கர்,
“இது போன்ற சம்பவங்களை நாங்கள் கண்டிக்கிறோம். இந்தப் பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, தேவையானதைச் செய்துவருகிறோம். அதோடு, மாணவருக்கு கவுன்சலிங் கொடுக்கப்பட்டதுடன், பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
இந்தச் சம்பவம், சாதாரண வகுப்பு ஒன்றின்போது நடந்ததால் எங்களுக்குத் தெரியாது. எனவே, தாமாக முன்வந்து நாங்கள் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கிச்சன் கீர்த்தனா: கீரை – அவல் உப்புமா
சென்னை விமான நிலைய போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய வழிகள்!