இமாச்சல் முதல்வர்: முடிவெடுக்கும் பிரியங்கா காந்தி

இந்தியா

இமாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வர் யார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி முடிவெடுப்பார் என்று அக்கட்சி தரப்பில் கூறப்படுகிறது.

2022 சட்டமன்றத் தேர்தலில் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. 68 சட்டப்பேரவை தொகுதிகளில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2012ல் 36 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தற்போது கூடுதலாக 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

வேலைவாய்ப்பு, இலவச ஸ்கூட்டி உள்ளிட்ட கவர்ச்சிகர திட்டங்களை பாஜக அறிவித்தாலும், காங்கிரஸும் பல முக்கிய திட்டங்களை அறிவித்தது.

குறிப்பாக, இமாச்சலில் 18 தொகுதிகளில் ஆப்பிள் விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் ஆப்பிள்களைக் குறைந்த விலைக்குப் பெரு நிறுவனங்கள் வாங்குவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்டு தோட்டக்கலை வாரியம் அமைக்கப்படும் என்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

இதுமட்டுமின்றி அக்னிபாத், பணவீக்கம், வேலையின்மை மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் போன்ற பிரச்சனைகளை எழுப்பினார்.

ராகுல் காந்தி இமாச்சல பிரதேசத்தில் ஒரு பிரச்சாரம் கூடச் செய்யவில்லை என்றாலும் புதிய தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுடன் இணைந்து பல பேரணிகளை வழிநடத்தினார் பிரியங்கா காந்தி.

இந்நிலையில் காங்கிரஸ் அங்கு வெற்றி பெற்றுள்ளது. வெற்றிக்குக் காரணமாக இருந்த பிரியங்கா காந்தியை மூத்த தலைவர்கள் பாராட்டி வருகின்றனர்.

எனினும் தற்போது வரை அடுத்த முதல்வர் யார் என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
இந்தசூழலில் நேற்று (டிசம்பர் 9) மாலை மத்திய கண்காணிப்பாளர்கள் ராஜீவ் சுக்லா, பூபிந்தர் ஹூடா மற்றும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ஆகியோர் முன்னிலையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அடுத்த முதல்வர் யார் என்று முடிவு எடுக்கப்படாவிட்டாலும், முதல்வர் விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேசமயத்தில் அடுத்த முதல்வர் யார் என்பதை பிரியங்கா காந்தி முடிவெடுப்பார் என்று காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே மறைந்த தலைவர் வீரபத்ர சிங்கின் மனைவியும், மூன்று முறை எம்.பி.யாக இருந்தவருமான பிரதீபா சிங், “முதல்வர் பதவிக்கு தகுதியானவர்” எனக் கூறி அவரது ஆதரவாளர்கள் நேற்று நடந்த கூட்டத்துக்கு முன்னதாக கோஷம் எழுப்பியிருக்கின்றனர்.

இவரைத் தவிர முதல்வர் ரேசில், சுக்விந்தர் சிங் சுகு மற்றும் முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோரும் உள்ளனர். இந்த மூவரில் ஒருவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரியா

“மாமாகுட்டியே கூப்பிட்டாலும் போய்டாதீங்க” : வைரலாகும் ட்வீட்!

பாமக Vs சிறுத்தைகள்: தணியாத பதட்டம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.