நாட்டில் முதல்முறையாக 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று(அக்டோபர் 1) அறிமுகப்படுத்தி வைத்தார்.
இந்திய தொலைத்தொடர்பு சேவைகளை பொறுத்தமட்டில் 5ஜி சேவை என்பது ஒரு மைல்கல் முன்னேற்றமாகவே கருதப்படுகிறது.
தற்போதுள்ள தொலைத்தொடர்பு சேவைகளை விட 10 மடங்கு வேகத்துடன் செயல்படக்கூடியது 5ஜி.
இந்த சேவையின் மூலம் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை சிறப்பாக கையாள முடியும். குறிப்பாக ஓரிடத்தில் இருந்துகொண்டே உலகின் இன்னொரு மூலையில் இருக்கக்கூடிய ரோபோக்களை இயக்கமுடியும்.
பல்வேறு நாடுகளில் இருப்பவர்கள் ஒரே நேரத்தில் வீடியோ காலில் பேச முடியும். அத்துடன் மருத்துவம், கல்வி, வர்த்தகம், போக்குவரத்து,
என அனைத்துத்துறைகளிலும் 5ஜி சேவை மூலம் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரமுடியும்.
எனவே இந்தியாவில் 5ஜி சேவையை கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வந்தன. இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை 26ஆம் தேதி நடைபெற்றது.
இதில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வொர்க் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன. ரூ.1.50லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் போனது.
இந்நிலையில் மத்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் இந்திய செல்லுலர் ஆப்ரேட்டர்கள் சங்கம் இணைந்து நடத்தும் இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாடு இன்று(அக்டோபர் 1) டெல்லி பிரகதி மைதானத்தில் தொடங்கியது.
அக்டோபர் 4-ம் தேதி வரையில் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அத்துடன் 5ஜி சேவையையும் நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார்.
இந்தியாவின் டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை , பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் முதல்கட்டமாக 5ஜி சேவை தொடங்கப்படும்.
பின்னர் இந்த சேவை அடுத்த இரண்டு ஆண்டுகளில் படிப்படியாக நாடு முழுவதும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துவக்க விழாவில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜியோ நிறுவன உரிமையாளர் அம்பானி, ஏர்டெல் நிறுவனத்தின் உரிமையாளர் சுனில் மித்தல், வோடஃபோன் நிறுவனத்தின் உரிமையாளர் குமாரமங்கலம் பிர்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.
கலை.ரா
இன்று சசிகலா ஆலோசனைக் கூட்டம்: அஜெண்டா இதுதான்!