உயிருக்கு ஆபத்தாகும் காற்று… டெல்லியில் நவம்பர் 10 வரை பள்ளிகள் மூடல்!

இந்தியா

காற்று மாசு காரணமாக டெல்லியில் தொடக்கப் பள்ளிகள் வரும் நவம்பர் 10ஆம் தேதி வரை மூடப்படும் என்றும்,  உயர்நிலை பள்ளிகளுக்கு விருப்பம் இருந்தால் ஆன்லைன் வகுப்புகள் நடத்தவும் டெல்லி அரசு இன்று (நவம்பர் 5) உத்தரவிட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத அளவிற்கு காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சோதனையில் (CPCB) கடந்த 3ஆம் தேதி காலையில் காற்றுத் தரக் குறியீடானது (AQI) 468-ல் இருந்து நேற்று காலை 6 மணிக்கு 413 ஆக குறைந்து சிறிது முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் இன்று காலை மீண்டும் 460 ஆக உயர்ந்து மோசமான நிலையை எட்டியுள்ளது.

எங்கும் நச்சு புகைமூட்டமாக சூழ்ந்து காணப்படும் டெல்லியில் குழந்தைகள் மற்றும் முதியவர்களிடையே சுவாசம் மற்றும் கண் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருகிறது.

நுரையீரலில் ஆழமாகப் பதிந்து உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய மைக்ரோஸ்கோபிக் PM2.5 துகள்கள், கடந்த சில நாட்களில் டெல்லி முழுவதும் பல இடங்களில் அரசின் பாதுகாப்பான வரம்பான 60 மைக்ரோகிராமை விட ஏழு முதல் எட்டு மடங்கு உயர்ந்துள்ளது. இது உலக சுகாதார நிறுவனத்தின் பாதுகாப்பான வரம்பை விட 80 முதல் 100 மடங்கு அதிகமாகும்.

டெல்லியில் காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான மையத்தின் திட்டத்தின் கீழ், AQI 450 ஐத் தாண்டினால், கனரக வாகனங்கள் மற்றும் அனைத்து கட்டுமான நடவடிக்கைகளுக்கும் தடை உட்பட அனைத்து அவசர காற்று மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் செயல்படுத்துவது கட்டாயமாகும்.

அதன்படி டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு அளவைக் கருத்தில் கொண்டு, டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வரும் நவம்பர் 10ஆம் தேதி வரை  அனைத்து தொடக்க பள்ளிகளையும் மூட டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

6-12 வகுப்புகள் வரையிலான பள்ளிகளை மூட வேண்டிய அவசியமில்லை. ஆனால் பள்ளி நிர்வாகம் விரும்பினால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம்” என்று அறிவுறுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

இன்று பவுலராக வருகிறாரா விராட் கோலி?: ராகுல் டிராவிட் சூசகம்!

பெண்கள் பாதுகாப்பு தான் காரணமா?: பிரதீப்புக்கு சப்போர்ட் செய்த கவின், சினேகன்!

 

 

 

+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0