மேற்குவங்க மாநிலம் சந்தேஷ்காலி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஷாஜகான், பழங்குடியின பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அவர் ரேஷன் பொருள் கடத்தல், நில அபகரிப்பு போன்ற குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் ஷாஜகான் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை கடந்த ஜனவரி 5-ஆம் தேதி சோதனை நடத்தியது. அப்போது ஷாஜகான் ஆதரவாளர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளை தாக்கினர். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஷாஜகான் தலைமறைவானார். 55 நாட்களுக்கு பிறகு பிப்ரவரி 29-ஆம் தேதி மேற்குவங்க காவல்துறை அவரை கைது செய்தது.
சந்தேஷ்காலி விவகாரம் தொடர்பாக அங்கு விசாரணை மேற்கொண்ட தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா, அது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேற்று (மார்ச் 5) நேரில் சந்தித்தார்.
அப்போது சந்தேஷ்காலி விவகாரத்தையும் அதில் பெண்கள் பாதிக்கப்பட்டதையும் முன்வைத்து, மேற்கு வங்கம் மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்தார்.
குடியரசுத் தலைவருடனான சந்திப்பினை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரேகா ஷர்மா,
”சந்தேஷ்காலி விவகாரம் கடும் கவலைக்குரியது. சந்தேஷ்காலி ஒரு தனி சம்பவம் அல்ல. இதற்கு முன்பும் இதே போன்ற பல வன்முறை சம்பவங்கள் அந்த மாநிலத்தில் பதிவாகியுள்ளன.
ஆனால் மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு குடியரசுத் தலைவருக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “தேசிய மகளிர் ஆணையத்தின் சார்பிலான பரிந்துரையை செவிமெடுத்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மேற்கு வங்கம் மாநிலத்தின் நிலைமையை அறிந்திருப்பதாகவும், அதை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் உறுதியளித்தார்” என்றார்.
இதே போன்று சந்தேஷ்காலி விவகாரத்தில் ஆய்வு மேற்கொண்ட தேசிய பட்டியலினத்தோர் ஆணையமும் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்துள்ளது.
இதனிடையே ’சந்தேஷ்காலி அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் விசாரணையை மேற்கு வங்க காவல்துறையிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிப்ரவரி 29 அன்று மேற்கு வங்க காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட திரிணாமுல் கட்சியின் முன்னாள் பிரமுகர் ஷாஜகான் ஷேக்கின் காவலை சிபிஐ வசம் ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி, சிபிஐ வசம் ஷாஜகான் ஷேக்கை ஒப்படைக்க மாநில அரசு மறுத்துள்ளது.
மற்றொரு அதிரடி நடவடிக்கையாக, சந்தேஷ்காலி பகுதியில் ஷாஜகான் ஷேக்கின் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட ரூ12.78 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
பியூட்டி டிப்ஸ்: எப்படிப்பட்ட ஃபேஷன் ஆடைகள் கோடைக்கு உகந்தது?