இலங்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் (91) நேற்று இரவு உயிரிழந்தார். அவருக்கு உலகெங்கும் வாழும் இலங்கை தமிழர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்து வந்த இரா.சம்பந்தன், கிழக்கு திரிகோணமலை மாவட்டத்தில் இருந்து இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் எம்.பியாக செயல்பட்டு வந்தவர் .
இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு மற்றும் அங்கு வாழும் தமிழ் மக்களின் உரிமைக்காக சிறப்பான முறையில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் வயது மூப்பினால் அவர் சமீப காலமாக மிகவும் சிரமப்பட்டு வந்த நிலையில், நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளில் பங்கேற்காமல் இருந்து வந்தார்.
தனது உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காத சம்பந்தன், கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நேற்று (ஜூலை 30) இரவு 11 மணியளவில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படும்!
இதனையடுத்து அவரது மறைவிற்கு அந்நாட்டு பிரதமர், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்தனர். மேலும் கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசித்து வரும் இலங்கை தமிழர்களும் இரா.சம்பந்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது உடல் கொழும்பில் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் நாடாளுமன்றத்திலும் ஒரு நாள் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதன் பின்னர், இறுதி ஊர்வலத்திற்காக சொந்த ஊரான திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழர்களின் குரலாக ஒலித்தவர்!
இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தமிழர்களுக்கு எதிரான போரின் போது தமிழ் மக்களின் குரலாக ஒலித்தவர். 1977 முதல் 1983 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர், பின்னர் 2001 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார்.
2015 செப்டெம்பர் 3 முதல் 2018 டிசம்பர் 18 வரை இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் அவர் பதவி வகித்தார்.
எடப்பாடி பழனிசாமி இரங்கல்!
இந்த நிலையில் இரா.சம்பந்தனின் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாதவரும் , மறுக்க முடியாதவருமாகிய, ஈழ தமிழ்ச் சமூகத்தின் மிகப்பெரும் தூணாகத் திகழ்ந்தவரும் ஆன, இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் ஐயா, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் தனது 91 வது வயதில் கொழும்பில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
இலங்கை தமிழரின் அடுத்த தலைமுறை பாதுகாப்பான வாழ்வியலை கட்டமைக்க, ஒரு சரியான அடித்தளத்தை அமைத்த தமிழின தலைவரான அவரது இழப்பு ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. அன்னாரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்” என இரங்கல் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
எங்கு பார்த்தாலும் வெள்ளம்… ஐந்தாவது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் காலமானார் : எடப்பாடி இரங்கல்!
”என் கடைசி மூச்சு உள்ளவரை மறக்கமாட்டேன்”: இந்திய வீரர் குறித்து இர்பான் நெகிழ்ச்சி!