‘ஜன் சுராஜ்’… புதிய கட்சியை தொடங்கிய பிரசாந்த் கிஷோர்

அரசியல் இந்தியா

தேர்தல் வியூக நிபுணராக இருந்த பிரசாந்த் கிஷோர், ‘ஜன் சுராஜ்’ என்ற புதிய கட்சியை இன்று (அக்டோபர் 2) தொடங்கியுள்ளார்.

திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நேரத்தில் பிரசாந்த் கிஷோர் வியூகம் அமைத்து கொடுத்துள்ளார்.

இந்தநிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி அன்று தேர்தல் வியூக பணிகளில் இனி ஈடுபடப்போவதில்லை என்றும் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் பிரஷாந்த் கிஷோர் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து பிகார் மாநிலம் முழுவதும் 3,000 கி.மீ-க்கு மேல் நடைபயணம் மேற்கொண்டார். அடுத்த ஆண்டு பிகார் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காந்தி பிறந்தநாளான இன்று பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ‘ஜன் சுராஜ்’ என்ற தனது புதிய கட்சியை பிரஷாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் அவர் பேசும்போது, “கடந்த இரண்டு வருடமாக ஜன் சுராஜ் இயக்கமாக நாம் செயல்பட்டு வந்தோம். எப்போது நீங்கள் கட்சி ஆரம்பிக்கப் போகிறீர்கள் என்று பொதுமக்கள் தொடர்ந்து என்னிடம் கேட்டு வந்தார்கள். தேர்தல் ஆணையமானது ஜன் சுராஜ் இயக்கத்தை கட்சியாக மாற்ற இன்று அனுமதி அளித்துள்ள மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

பிகார் மாநில மாணவர்களுக்கு உலக தரத்திலான கல்வியை கொடுப்பதற்கு அடுத்த பத்து ஆண்டுகளில் நமக்கு ஐந்து லட்சம் கோடி செலவாகும். பிகார் மாநிலத்தில் மதுவிலக்கு கொள்கை நீக்கப்பட்டு, அதில் கிடைக்கும் பணம் கல்விக்காக செலவழிக்கப்படும். மதுவிலக்கு கொள்கை நடைமுறையில் இருப்பதால், பிகார் மாநிலத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது” என்று தெரிவித்தார்.

பிகார் மாநிலத்தைப் பொறுத்தவரை, ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தநிலையில், பிராஷாந்த் கிஷோரின் புதிய கட்சி பிகார் அரசியலில் எண்ட்ரி கொடுத்திருப்பது தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஈரானிடம் அணுகுண்டு உள்ளதா? உலக நாடுகள் அச்சம்!

ஏடிஎம் கொள்ளையர்களைப் பிடித்த நாமக்கல் போலீஸ்… பாராட்டிய டிஜிபி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *