தேர்தல் முடிவு குறித்த கருத்து கணிப்பு தவறானதால், ‘ஆக்ஸிஸ் மை இந்தியா’ நிறுவனத்தின் இயக்குநர் பிரதீப் குப்தா, தொலைக்காட்சி நேரலையிலேயே கண்ணீர் சிந்தியுள்ளார்.
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில், இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஜூன் 1ஆம் தேதி நடைபெற்றது.
தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர், பல்வேறு நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை வெளியிட்டனர்.
அதில், “ஆக்ஸிஸ் மை இந்தியா” நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில்,
பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி 361-401 தொகுதிகளை கைப்பற்றும் எனவும், இந்தியா கூட்டணி 160 தொகுதிகளை கூட கைப்பற்றாது எனவும் தெரிவித்திருந்தது.
ஆனால், தற்போதைய நிலவரப்படி என்.டி.ஏ. கூட்டணி 294 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 232 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சியின் விவாதத்தில் ‘ஆக்ஸிஸ் மை இந்தியா’ நிறுவனத்தின் இயக்குநர் பிரதீப் குப்தா இன்று (ஜூன் 4) கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “நாங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் என்.டி.ஏ. கூட்டணி 361-401 இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்கும் என்று தெரிவித்திருந்தோம்.
ஆனால், தற்போது வரை என்.டி.ஏ. கூட்டணி 295 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. எங்களது கருத்துக் கணிப்பு மாறியதற்கு முக்கிய காரணம் 3 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள்.
உத்தரப்பிரதேசத்தில் என்.டி.ஏ. கூட்டணி குறைந்த பட்சமாக 67 இடங்களை கைப்பற்றும் என்று நாங்கள் கணக்கிட்டோம். ஆனால், 38 இடங்களை மட்டுமே உத்தரப்பிரதேசத்தில் என்.டி.ஏ. கைப்பற்றியுள்ளது.
தொடர்ந்து, மேற்கு வங்காளத்தில் 26-32 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்று கணித்திருந்தோம். ஆனால், 11 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளனர்.
மேலும், மகாராஷ்டிராவில் 28 தொகுதிகளில் வெற்றி என்று கணித்திருந்தோம், ஆனால் 20 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளனர்.
நாங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்பு முற்றிலும் தவறாகிவிட்டது. நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பதை சுயபரிசோதனை செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து, கருத்து கணிப்பு தவறானதை கூறி விவாத நிகழ்ச்சியிலேயே கண்ணீர் சிந்தினார் பிரதீப் குப்தா.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சிறையில் இருந்தபடி முன்னாள் முதல்வரை தோற்கடித்த சுயேட்சை வேட்பாளர்!
அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள தொகுதியில் பாஜக தோல்வி முகம்!