தென்கிழக்கு துருக்கியில் இன்று (பிப்ரவரி 6) அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 53 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியின் ஒஸ்மானியே மாகாணத்தில் 3 பேரும், சிரியா எல்லைக்கு அருகே தென் கிழக்கு துருக்கி பகுதியில் அமைந்துள்ள சன்லியுர்ஃபாவில் 10 பேரும், மலாட்யா மாகாணத்தில் 23 பேரும், உர்பா மாகாணத்தில் 17 பேரும் உயிரிழந்தனர்.
ஒஸ்மானியே மாகாணத்தில் 34 கட்டிடங்கள் நிலநடுக்கத்தால் சேதமடைந்ததாக ஆளுநர் எர்டிங் யில்மாஸ் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கமானது உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4.17 மணியளவில் 17.9 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி உள்ளது.
பின்னர் 15 நிமிடங்களுக்கு பிறகு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி உள்ளது என்று துருக்கியின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
துருக்கியின் தெற்கு பகுதியில் அதிக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அண்டை நாடுகளான லெபனான், சிரியா,சைப்ரஸ் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
துருக்கி அடிக்கடி நிலநடுக்கத்தை சந்திக்கும் ஒரு நாடாகும்.இங்கு கடந்த 1999-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.
2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் எலாசிக் என்ற பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 40 பேரும், அக்டோபர் மாதத்தில் ஏஜியன் கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 114 பேர் உயிரிழந்தனர்.
செல்வம்