புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று (அக்டோபர் 2) இரவு போராட்டத்தில் ஈடுபட்ட மின்துறை ஊழியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்ய, ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு புதுச்சேரி அரசு இன்று (அக்டோபர் 3) அனுமதி கோரியுள்ளது.
புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்குவதற்கான டெண்டர் அறிவிப்பு அரசு சார்பில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து மின்வாரிய ஊழியர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அடிப்படை சீரமைப்பு பணிகள் நடைபெறுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதனால் புதுச்சேரி மாநிலத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் இரவு நேரத்தில் அவதிப்பட்டு வருகின்றனர்.
நிலைமையை சமாளிக்க புதுச்சேரி அரசு துணை ராணுவத்தை வரவழைத்துள்ளது.
அதுபோன்று, புதுச்சேரி வந்துள்ள அகில இந்திய மின் துறை கூட்டமைப்பினர், மின் ஊழியர்களிடம் போராட்டம் குறித்து கேட்டறிந்தனர்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டவர்களை அவர்கள் இன்று சந்தித்து மின்துறை தனியார்மயமாக்கலை கைவிட வலியுறுத்தவுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 4 நாட்களாக பகலில் மட்டும் போராட்டம் நடத்தி வந்த மின்துறை ஊழியர்கள் 500க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு மின்துறை தலைமை அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, போராட்டத்தை கைவிட வலியுறுத்தி, போலீசார் தரப்பில் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.
இதனால் ஊழியர்களை கைது செய்த போலீசார் அவர்களை கோரிமேடு பகுதியில் உள்ள காவலர் சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர்.
காவலர் சமுதாய நலக்கூடத்தில் அடைக்கப்பட்ட ஊழியர்கள், மின்துறை சொத்துகளைச் சேதப்படுத்த மாட்டோம், அறவழியில் போராடுவோம் என உத்தரவாதம் அளித்ததால், அவர்கள் அனைவரும் நள்ளிரவில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்தநிலையில், நேற்று (அக்டோபர் 2) செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “பொதுமக்களுக்கு இடையூறு செய்ய வேண்டும் என்ற நோக்கில், மருத்துவமனைகளில் செயற்கையாக மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றனர்.
அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தை கைவிடவில்லை என்றால் மின் துறை ஊழியர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
அத்தியாவசிய தேவைகள் பாதுகாப்பு சட்டமான, எஸ்மா சட்டத்தை அமல்படுத்த அனுமதி கேட்டு, ஆளுநர் தமிழிசை ஒப்புதலுடன் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புதுச்சேரி அரசு ஆவணங்களை இன்று அனுப்பி வைத்துள்ளது.
இன்று மாலை அல்லது நாளை உள்துறை அமைச்சகத்திடமிருந்து பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் எஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால், ஒரு வருடம் முதல் இரண்டு வருடங்கள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும். எஸ்மா சட்டத்தின் கீழ் வாரண்ட் இல்லாமல் ஊழியர்களை போலீசார் கைது செய்யலாம்.
செல்வம்
ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: ரவுடி உயிரிழப்பு!
கொட்டும் மழையில் பேசிய ராகுல் : காங்கிரஸில் புயல் வீசுமா?