மத்திய அரசின் தடையை தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலைக்கப்படுவதாக கேரள மாநில பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பல்வேறு அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இரண்டுகட்டங்களாக சோதனை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து இந்த அமைப்பின் முக்கியத் தலைவர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. கேரளாவில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் வீடுகள் மீது மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 28) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பும் அதன் துணை அமைப்புகளான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பு, ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன், என்.சி.எச்.ஆர்.ஓ. மனித உரிமை அமைப்பு ஆகியவையும் சட்டவிரோதமானவை என மத்திய அரசு அறிவித்தது.
இந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தடையை தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள மாநில பொதுச்செயலாளர் அப்துல் சத்தார், “நாட்டின் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்ற வகையில், மத்திய அரசின் இந்த தடையை நாங்கள் ஏற்கிறோம். அதன்படி இந்த அமைப்பு கலைக்கப்படுகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
மம்தா பானர்ஜி விரைவில் கைது?: பாஜகவால் பரபரக்கும் மேற்கு வங்கம்!
விசிக-வின் மனித சங்கிலி போராட்டம்: ஆதரவளித்த கட்சிகள்!