புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை, திடீரென உயிரிழந்தது அங்குள்ள பக்தர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயிலுக்கு, 1996ஆம் ஆண்டில் யானை ஒன்று தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது. அந்த யானைக்கு லட்சுமி என்று பெயர் சூட்டப்பட்டது.
இந்த யானை நாள்தோறும் கோயிலுக்கு வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. புத்துணர்ச்சி முகாமுக்கு செல்லும் நாட்கள் தவிர மற்ற நாட்களில் கோயிலுக்கு வந்து பக்தர்களுக்கு யானை லட்சுமி தொடர்ச்சியாக ஆசி வழங்கி வந்தது.
தமிழகத்தில் கோயில் யானைகளுக்கு ஆண்டுதோறும் 48 நாட்கள் புத்துணர்வு முகாம் நடத்தப்படுவது வழக்கம். கொரோனா காலத்தில் கோயில் யானைகளுக்கான இந்த புத்துணர்வு முகாம் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் யானை லட்சுமி இன்று (நவம்பர் 30) அதிகாலை வழக்கம்போல் காமாட்சி அம்மன் கோயில் வீதியில் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டது.
அப்போது திடீரென மயங்கி விழுந்த லட்சுமி, சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. யானை லட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
புதுவை மணக்குள விநாயகர் கோயிலில் 25 ஆண்டுகளாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த யானை லட்சுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, மணக்குள விநாயகர் கோயில் நடை சாத்தப்பட்டு யானை லட்சுமி, பக்தர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்
இனி யாரும் மெசேஜ் பண்ணலனு கவலைப்பட வேணாம்: வாட்ஸ் அப் கொடுக்கும் புதிய அப்டேட்!
சேலம் புத்தகத் திருவிழா: 4 நாட்கள் நீடிப்பு!