இந்தோனேசியாவில் கால்பந்து போட்டி மைதானத்தில் நடந்த வன்முறையில் 17 குழந்தைகள் உட்பட 187 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் அந்நாட்டின் மலாங் பகுதி காவல்துறை தலைவர் மற்றும் 9 உயரதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 18 அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கால்பந்து போட்டிகளின் போது இந்தோனேசியாவில் வன்முறை சம்பவங்கள் நடப்பது புதிதல்ல. 1938-ம் ஆண்டுக்கு பிறகு இந்தோனேசியா ஒரு முறை கூட ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றதில்லை. எனினும் அங்கு உள்நாட்டு லீக் பரவலாக பிரபலமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்தோனேசிய உள்நாட்டு ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரில் எதிராளிகளாக கருதும் அணிகளுக்கிடையே போட்டிகள் பெரும்பாலும் வன்முறையில் தான் முடிவடைகிறது.
ஆனால் ஆதரவாளர்களுக்கு இடையேயான கலவரம் பொதுவாக மைதானத்திற்கு வெளியே நடப்பது தான் வழக்கம். இம்முறை வழக்கத்துக்கு மாறாக ஆடுகளத்தின் உள்ளேயே ரசிகர்கள் வெறியாட்டம் நிகழ்த்திவிட்டனர்.
கலவரமாக மாறிய கால்பந்து ஆட்டம்!
இந்நிலையில் தான் கடந்த 1ம் தேதி இரவு கிழக்கு ஜாவாவின் மலாங் நகரில் நடந்த லீக் தொடரில் அரேமா – பெர்சிபயா சுரபயா ஆகிய அணிகள் மோதின. இவ்விரு அணிகளும் நீண்ட நாள் பகையாளிகள்.
இந்த ஆட்டம் அரேமா அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்றதால் ரசிகர்களின் மோதலை தவிர்ப்பதற்காக பெர்சிபயா அணி ரசிகர்களுக்கு டிக்கெட்கள் விற்கப்படவில்லை.
அரேமா அணி இதற்கு முன்னர் இந்த மைதானத்தில் தோல்வியை சந்தித்தது இல்லை. முதன்முறையாக அந்த அணி பரம வைரியிடம் 3-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. அதனை ரசிகர்களால் சகித்துக்கொள்ள முடியாமல் போனது.
இதனையடுத்து வெற்றி பெற்ற பெர்சிபயா அணி வீரர்களுக்கு எதிராக மைதானத்திற்குள் நுழைந்த அரேமா அணி ரசிகர்கள் பாட்டில்கள் மற்றும் அங்கிருந்த பிற பொருட்களையும் வீசி எறிந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
மைதானத்திற்கு வெளியே குறைந்தது ஐந்து போலீஸ் வாகனங்கள் கவிழ்க்கப்பட்டு எரிக்கப்பட்டன.
கலவரத்தை கட்டுப்படுத்த மைதானத்திற்குள் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
இதில் மைதானம் எங்கும் புகை மண்டலம் சூழ, பீதியடைந்த ரசிகர்கள் தப்பிக்க நினைத்தபோது அவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.
தொடர்ந்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர்.
இதுவரை 17 குழந்தைகள், 2 போலீஸ் அதிகாரிகள் உட்பட 187 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 323 பேர் காயமடைந்துள்ளதாகவும், சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ஜகார்த்தா போலீசார் தெரிவித்தனர்.
அரசின் நடவடிக்கை என்ன?
இதனையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய குற்றத்திற்காக மலாங் காவல்துறைத் தலைவர் ஃபெர்லி ஹிதாயத், மைதானத்தில் இருந்த 9 காவல்துறை உயரதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில் உறுதியாகும் பட்சத்தில் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என்று இந்தோனேசியாவின் தேசிய காவல் செய்தித் தொடர்பாளர் டெடி பிரசெட்யோ கூறியுள்ளார்.
மேலும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதற்கு பொறுப்பான 18 அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்த விசாரணை 3 வாரங்களில் முடியும் என்று பாதுகாப்பு அமைச்சர் முகமது மஹ்ஃபுட் கூறினார்
கால்பந்து மைதானத்தின் உள்ளேயும், வெளியேயுமுள்ள 32 சிசிடிவி கேமராக்களையும், மைதானத்தில் இருந்த ரசிகர்களின் 9 செல்போன்களின் வீடியோவையும் போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர்.
கால்பந்து தொடர் நிறுத்தி வைப்பு!
இந்தோனேசியாவில் நடந்த இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து விசாரணைகள் நிறைவடைந்து பாதுகாப்பு பலப்படுத்தும் வரை பிரீமியர் கால்பந்து லீக் தொடரை நிறுத்தி வைக்க அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ உத்தரவிட்டுள்ளார்.
இந்தோனேசியாவின் கால்பந்து சங்கம் அரேமாவை நடப்பு சீசன் முழுவதும் விளையாட தடை விதித்துள்ளது.
தடைகளை ஏற்க தயார்!
அதே நேரத்தில் அரேமா எஃப்சி அணியின் தலைவர் கிலாங் வித்யா பிரமனா, இந்த தடையை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்தோனேசிய மக்களுக்கும் தனது வருத்தத்தையும் ஆழ்ந்த மன்னிப்பையும் தெரிவித்ததோடு,
தனது அணியின் மைதானத்தில் நடந்த சோகத்திற்கு முழுப் பொறுப்பையும் ஏற்கத் தயாராக இருக்கிறோம்.
பாதிக்கப்பட்டவர்களின் உயிரைத் திருப்பித் தர முடியாது என்றாலும், உதவி வழங்க நான் தயாராக இருக்கிறேன்.
இந்த சம்பவம் கணிப்புக்கு அப்பாற்பட்டது, காரணத்திற்கு அப்பாற்பட்டது. இந்தோனேசியாவின் கால்பந்து சங்கம் மற்றும் அரசாங்கத்திடம் இருந்து எந்தவொரு தடைகளையும் ஏற்க அரேமா எஃப்சி தயாராக இருக்கிறது” என்று அவர் கூறினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
23 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி : வன்முறையில் முடிந்த கால்பந்து போட்டி!
கோவை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வாபஸ்