ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது இன்று (அக்டோபர் 7) ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் போரை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பும், மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகித்து வருகின்றன.
இஸ்ரேல், பயங்கரவாத இயக்கமாக கருதும் ஹமாஸ் அமைப்பை போன்றே பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்பட மேலும் சில ஆயுதக்குழுக்களும் காசா முனை மற்றும் மேற்கு கரையில் செயல்பட்டு வருகின்றன.
மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் இஸ்ரேலின் தெற்கு பகுதிகள் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் பாலஸ்தீனிய அமைப்புகள் இன்று காலை ஏவுகணை தாக்குதல் நடத்தியது. சுமார் 5,000 ஏவுகணைகள் பாய்ந்ததாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் உட்பட 22 பேர் இறந்துள்ளதாகவும், 2 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலின் பல்வேறு நகரங்களுக்குள் பாலிஸ்தீனிய ஆயுதக்குழுக்கள் தூப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தி வருகின்றனர். ஹமாஸ் தீவிரவாதிகள் பாராகிளைடிங் செய்து நாட்டுக்குள் ஊடுருவியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
காசா எல்லை பகுதியை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. இதனால் இஸ்ரேல் மக்கள் உயிர் பயத்துடன் உள்ளனர்.
ஆபரேஷன் அல் அக்சா பிளோட் என்ற பெயரில் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடங்கியுள்ளதாக பாலஸ்தீனிய ஆயுதக்குழு ஹமாஸ் அறிவித்துள்ளது.
இஸ்ரேலிய எல்லை நகரங்களில் உள்ள காவல் நிலையங்களை பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் கைப்பற்றியுள்ளதாகவும், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரை பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
#Israel is under a combined attack from Gaza during the Jewish holiday.
Both by rockets and ground infiltration of Hamas terrorists.The situation is not simple but Israel will prevail.
— Naor Gilon🎗️ (@NaorGilon) October 7, 2023
போரை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதனையடுத்து, பாலிஸ்தீனிய குழுக்களின் தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால் அந்நாட்டில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் தலைநகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மோனிஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஜயபாஸ்கர் சொத்துக்குவிப்பு வழக்கு: அக்டோபர் 30-க்கு ஒத்திவைப்பு!
Comments are closed.