இந்தியாவில் வரும் அக்டோபர் 1ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள இந்திய மொபைல் காங்கிரஸில் 5ஜி சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தவுள்ளார்.
இந்தியாவில் 5ஜி சேவைக்கான அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடங்கி 7 நாட்களாக 40 சுற்றுகளாக இணையதளம் வாயிலாக நடைபெற்று முடிந்தது.
இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வொர்க் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன. மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.88,078 கோடிக்கும், ஏர்டெல் ரூ.43,084 கோடிக்கும், வோடபோன் ஐடியா ரூ.18,784 கோடிக்கும், அதானி டேட்டா நெட்வொர்க் ரூ.212 கோடிக்கும் அலைக்கற்றைகளை ஏலம் எடுத்திருந்தன.
இதனைத் தொடர்ந்து 5ஜி சேவை விரைவிலேயே அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்து. இதையடுத்து, முதல்கட்டமாக 13 நகரங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் 5ஜி சேவை அறிமுகப்படுத்த உள்ளது. 5ஜி சேவை, 4ஜி சேவையைவிட 10 மடங்கு அதிக வேகத்துடன் செயல்படும். இதனால் பொதுமக்கள், வேகமான இணையச் சேவையைப் பெறமுடியும்.
வரும் அக்டோபர் 1 அன்று நடைபெறவுள்ள இந்திய மொபைல் காங்கிரஸில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு 5ஜி சேவையை அறிமுகப்படுத்தவுள்ளார். இந்த செய்தியினை இந்திய மொபைல் காங்கிரஸ் அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள மொத்த இணைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு 5G சேவையாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 2G மற்றும் 3G இன் பங்கு 10 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்றும் மொபைல் தொடர்புகளுக்கான உலகளாவிய அமைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
5ஜி நெட்வொர்க், 4ஜி நெட்வொர்க் சேவையைவிட அதிவேகமாகச் செயல்படும் என்பது மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், சிறிதளவு பயமும் இருக்கின்றது. மொபைல் நெட்வொர்க்குகள் தங்களது 4ஜி சேவைகளுக்கான விலையை அதிகரித்து வந்துள்ள நிலையில், 5ஜி சேவையின் விலை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லியில் பேசியிருந்தார். அப்போது பேசிய அவர், “நாங்கள் 5ஜி சேவையை விரைவில் செயல்படுத்த உள்ளோம், அக்டோபர் 12 ஆம் தேதிக்குள் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தவுள்ளோம். அதன்பிறகு நகரங்களில் விரிவுபடுத்தப்படும்.
அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் 5ஜி சேவை சென்றடைய வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. 5ஜி சேவை மலிவு விலையில் இருப்பதையும் நாங்கள் உறுதிசெய்வோம்” என்று பேசியிருந்தார்.
மக்கள் எதிர்பார்ப்பதைவிட 5ஜி சேவையை பயன்படுத்துவதற்கான செலவு குறைவுதான் என்ற செய்தியும் வெளியாகியிருந்தது. 5ஜி சேவையை அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் அளவுக்கு புதிய திட்டங்களை அமல்படுத்த உள்ளனர்.
5ஜி சேவை அதிகளவு பயனாளர்களைச் சென்றடைந்த பின்னர் 5ஜி சேவைக்கான கட்டணங்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மோனிஷா