எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி தான் திறந்து வைப்பார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (மே 24) தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று தற்போது திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. இதனை வரும் மே 28 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
ஆனால் மக்கள் வரிப்பணத்தால் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
மேலும் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், சிவசேனா, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி தான் திறந்து வைப்பார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று உறுதிபடுத்தியுள்ளார்.
இது குறித்து அவர், “புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை மே 28 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாடு ஆதினங்கள் வழங்கும் சோழர்களின் செங்கோல் இடம்பெறும்.
செங்கோல் என்பது குடியரசு தினம் பிறந்ததை நினைவுபடுத்துகிறது. இந்த செங்கோல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சோழர்களின் செங்கோல் பற்றி கேள்விப்பட்டுக் கூடுதல் விவரங்களை பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
செங்கோல் என்பது 1947-க்கு பிறகு மறக்கடிக்கப்பட்டு விட்டது. நாடு சுதந்திரம் அடைந்த போது (ஆகஸ்ட் 14, 1947 இரவு 10 மணியளவில்) நேருவிடம் திருவாவடுதுறை ஆதினம் கொடுத்த செங்கோல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ளது. இது ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்த நாட்டு மக்களுக்கு அதிகாரம் மாறியதற்கான அடையாளமாகும்.
சோழர்களின் செங்கோல் தற்போது அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த செங்கோலை பிரதமர் மோடி பெற்று நாடாளுமன்ற கட்டிடத்தில் வைப்பார்.
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவின் போது நாடாளுமன்ற கட்டிடப் பணியில் ஈடுபட்ட பணியாளர்களை கௌரவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
குடியரசுத்தலைவர் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்படாததை கண்டித்து எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அமித் ஷா தற்போது பிரதமர் மோடி தான் திறந்து வைப்பார் என்று கூறியுள்ளது அரசியல் கட்சிகளையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு!
’எடப்பாடி ஒரு நாள் கூட நிம்மதியாக இருக்க முடியாது’: தங்கம் தென்னரசு எச்சரிக்கை!
தில்லு ஷா ❤️