நம்பிக்கையில்லா தீர்மானம் எப்பொழுதும் தங்களுக்கு நல்ல சகுனம் என்றும், அதற்காக எதிர்க்கட்சியினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
மணிப்பூரில் நடந்த வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி தொடர் மவுனம் சாதித்த நிலையில் அவரது மவுனத்தை உடைப்பதற்காகவே நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை 26ஆம் தேதி எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.
இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தை காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய் கடந்த 8ஆம் தேதி தொடங்கிவைத்தார்.
அதனையடுத்து எதிர்க்கட்சிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே அனல் பறக்கும் விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் இறுதி நாளான இன்று (ஆகஸ்ட் 10) நாடாளுமன்றத்திற்கு மாலை 4 மணியளவில் வருகை தந்த பிரதமர் மோடி பதில் அளித்து வருகிறார்.
அவர் தனது உரையில், ”எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் எப்பொழுதும் எங்களுக்கு நல்ல சகுனம். கடவுள் கருணையுள்ளவர். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகளை தூண்டியதற்கு கடவுளுக்கு நன்றி. எதிர்க்கட்சியினருக்கு நன்றி.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும். 2014ல், இந்திய வாக்காளர்கள் முழுப்பெரும்பான்மை ஆட்சியை அளித்தனர், 2019ல், மக்கள் எங்களுக்கு சேவை செய்ய மற்றொரு வாய்ப்பை அளித்துள்ளனர்.
ஆட்சியை தீர்மானிக்க உங்களுக்கு ஐந்து ஆண்டுகள் அவகாசம் கொடுத்துள்ளதாக கடந்த 2019ஆம் ஆண்டிலும் நான் உங்களிடம் சொன்னேன். ஆனால் நீங்கள் கற்றுக்கொள்ளவில்லை.
பாஜக ஆட்சியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட வேண்டும் என்று சிலர் தீவிரமாக முயற்சி செய்கிறார்கள்.
தற்போதைய காலம் மிகவும் முக்கியமானது. இந்தியாவின் பல இலக்குகள் மற்றும் கனவுகளை நிறைவேற்ற உதவும்.
இந்த கூட்டத்தொடரில் தீவிர விவாதங்கள் நடந்திருக்க வேண்டும். ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் தொடர்பான பல மசோதாக்கள் நிறைவேறியிருக்க வேண்டும். ஆனால் எதிர்க்கட்சிகள் அதில் ஆர்வம் காட்டவில்லை. எதிர்க்கட்சிகள் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளன. உங்களுக்கு அரசியலே முதன்மையானது.
நாட்டின் இளைஞர்கள் அல்லது எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் (எதிர்க்கட்சிகள்) கவலைப்படவில்லை. உங்கள் எதிர்காலத்தைப் பற்றிதான் நீங்கள் கவலைப்படுகிறீர்கள். இதனால் நீங்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரை செயல்பட விடவில்லை.
1999ல் அடல் பிஹாரி வாஜ்பாய் அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டது. எதிர்க்கட்சி விவாதத்திற்கு சரத் பவார் தலைமை தாங்கினார். 2003ல் சோனியா காந்தி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். 2018ல், கார்கே ஜி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். ஆனால் 2023ல் ஆதிர் ரஞ்சனுக்கு என்ன ஆனது. அவரது கட்சி அவரை ஏன் பேச விடவில்லை.
தூய்மை பாரத் திட்டத்தின் மூலம் 3 லட்சம் பேரின் உயிரைக் காப்பாற்றியதாக உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை பாராட்டியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஏழைகள் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 50 ஆயிரம் சேமிப்பதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
ஆனால் காங்கிரஸும் மற்ற எதிர்க்கட்சிகளும் அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். என்று பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருகிறார்.
கிறிஸ்டோபர் ஜெமா
”அமித் ஷா பேசியது பொய்”: அம்பலப்படுத்திய கலாவதி
கிரிவலப் பாதையில் அசைவ உணவுகள் கூடாது: ஆளுநர் ஆர்.என்.ரவி