நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணமிது என உலக தலைவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
ஜி20 மாநாடு இன்றும் (செப்டம்பர் 9) நாளையும் (செப்டம்பர் 10) டெல்லியில் நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் உலக தலைவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசும்போது, “நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது. உணவு, எரிபொருள் மேலாண்மை, இணையப் பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி, நீர் ஆகிய அத்தியாவசிய தேவைகள் எதிர்கால சந்ததியினருக்கு கிடைப்பதற்கு நாம் உறுதியான தீர்வைக் காண வேண்டும்.
21 ஆம் நூற்றாண்டிற்கான ஒரு புதிய திசையை காட்ட முக்கியமான நேரம் இது. நம்மிடமுள்ள பழைய பிரச்சனைகளை களைந்துவிட்டு புதிய உத்வேகத்துடன் செயல்பட வேண்டும்.
இது இந்திய மக்களின் ஜி20 ஆக மாறியுள்ளது. கோடிக்கணக்கான இந்தியர்கள் இதில் இணைந்துள்ளனர். நாட்டின் 60க்கும் மேற்பட்ட நகரங்களில், 200க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடந்துள்ளன.
ஆப்பிரிக்க யூனியனுக்கு ஜி20-ல் நிரந்தர உறுப்புரிமை வழங்க இந்தியா முன்மொழிந்தது. இந்த முன்மொழிவை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம் என்று நம்புகிறேன். எங்கள் குழுவின் கடின உழைப்பின் காரணமாக, ஜி20 தலைவர்களின் உச்சிமாநாட்டின் பிரகடனத்தில் ஒருமித்த கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தலைமைப் பிரகடனத்தை ஏற்க வேண்டும் என்பதே எனது முன்மொழிவு. இந்த அறிவிப்பை ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கிறேன். இதற்காக கடுமையாக உழைத்து, அதைச் சாத்தியப்படுத்திய எனது அமைச்சர்களை இந்தச் சந்தர்ப்பத்தில் வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்தார்.
செல்வம்
சந்திரபாபு நாயுடு கைது : ஆந்திர-தமிழக பேருந்து சேவை பாதிப்பு!