பப்புவா நியூ கினியா நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை இன்று (மே 22) காலை வெளியிட்டார்.
ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலாவதாக ஜப்பான் ஹிரோஷிமா சென்று ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்.
அங்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நேற்று (மே 21) இரவு பப்பூவா நியூ கினியா நாட்டிற்கு சென்றார். அவரை அந்நாட்டு பிரதமர் விமான நிலையம் சென்று வரவேற்றார்.
தொடர்ந்து ’தோக் பிசின்’ என்ற அந்நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை இன்று (மே 22) காலை வெளியிட்டார். இந்த நூல் வெளியீட்டின் போது, அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராப், ஆளுநர் சசிந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இது குறித்து பிரதமர் அவரது ட்விட்டர் பதிவில், “குறளை தோக் பிசின் மொழியில் மொழி பெயர்க்க எடுத்த முயற்சிக்காக மேற்கு புதிய பிரிட்டன் மாகாண ஆளுநர் சசீந்திரன் மற்றும் சுபா சசீந்திரன் ஆகியோரைப் பாராட்டுகிறேன். ஆளுநர் சசீந்திரன் தனது பள்ளி படிப்பை தமிழில் கற்றுத் தேர்ந்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று இரவு பப்புவா நியூ கினியா நாட்டிற்கு உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு சென்ற பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு வழக்கப்படி சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வருகை தரும் தலைவர்களுக்கு பப்புவா நியூ கினியா சார்பில் வரவேற்பு அளிக்கப்படாத நிலையில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பப்புவா நியூ கினியா நாட்டிற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
மோனிஷா