டெல்லியில் தனது பிறந்த நாளான இன்று (செப்டம்பர் 17) விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
செங்கோட்டையில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி உரையாற்றிய பிரதமர் மோடி, பிஎம் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை அறிவித்தார். மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த திட்டத்துக்கு ரூ.13,000 கோடியை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்து வரும் நிலையில், கைவினை கலைஞர்களின் தெய்வமான விஸ்வகர்மா ஜெயந்தி தினமான செப்டம்பர் 17ஆம் தேதி (இன்று) தொடங்கி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடும் பிரதமர் மோடி டெல்லி துவாரகாவில் கட்டப்பட்டுள்ள இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தை திறந்து வைத்தார்.
பின்னர் கண்காட்சி அரங்கிற்குள் சென்ற மோடி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் தொடக்க நிகழ்வாக அங்கிருந்த முடிவெட்டும் தொழிலாளி, செருப்பு தைக்கும் தொழிலாளிகளுடன் கலந்துரையாடினார்.
இதுகுறித்து பிரதமர் மோடி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் மூலம் குரு – சீடன் என்ற முறையில், பாரம்பரிய தொழில்களை செய்வோரின் குடும்பத்தின் முன்னேற்றத்துக்கு ஊக்கம் அளிக்கப்படும்.
இந்த திட்டத்தில் இணைய விரும்புகிறவர்கள் பொதுச் சேவை மையம் மூலம் இணையத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இதன்படி பிஎம் விஸ்வகர்மா சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவை வழங்கப்படும். திட்டத்தில் இணைபவர்களுக்குத் திறன் மேம்பாடு பயிற்சி வழங்கப்படும்.
தொழில் சார்ந்த கருவிகளை வாங்க ரூ.15,000 ஊக்கத் தொகை வழங்கப்படும். முதல் தவணையாக ரூ.1 லட்சம் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். இரண்டாம் தவணையாக ரூ.2 லட்சம் வரை 5 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
பெண்கள் முன்னேற்ற ஆய்வு மைய இயக்குநராக முதல் தமிழ் பெண் தேர்வு!