கேரளா மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ள பிரதமர், அம்மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில், நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோ உள்ளிட்ட பல்வேறு சேவை மற்றும் திட்டங்களை இன்று (ஏப்ரல் 25) தொடங்கி வைத்துள்ளார்.
பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக மத்தியப் பிரதேசத்தில் இருந்து நேற்று மாலை விமானம் மூலம் கொச்சி சென்றடைந்தார்.
அங்கு ரோடு ஷோவில் பங்கேற்ற பிரதமர் மோடி இளைஞர் அமைப்பினர் நடத்திய மாநாட்டிலும் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், விரைவில் கேரளாவில் பாரதிய ஜனதா ஆட்சி அமையும் என்றார்.
இந்நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் கொச்சியில் தங்கிய பிரதமர், இன்று காலை அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார்.
அவரை கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் விமான நிலையத்தில் நேரில் சென்று வரவேற்றனர்.
வந்தே பாரத் ரயில்
அதன்பின்னர் பலத்த போலீசார் பாதுகாப்புடன் திருவனந்தபுரம் சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு சென்றார்.
அங்கு திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை செல்லும் கேரளாவின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திட்ட அட்டவணையின்படி, கேரளாவின் 11 மாவட்டங்களை தொட்டுச்செல்லும் இந்த புதிய வந்தே பாரத் ரயில், காசர்கோடு மற்றும் திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையேயான தூரத்தை 8 மணி 05 நிமிடங்களில் கடக்கும். இதே தூரத்தை ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலானது 10 மணி நேரம் 45 நிமிடங்கள் எடுக்கும்.
நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோ
அதனைத்தொடர்ந்து நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோ சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ரூ.747 கோடியில் செயல்படுத்தப்படும் இந்தத்திட்டத்தின் மூலம் கொச்சி நகரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கடலில் உள்ள தீவுகளை இணைக்கும் வகையில் 11 தீவுகளுக்குச் சென்று ரசிக்கலாம்.

கொச்சி படகுகள் நிறுத்துமிடத்தில் இருந்து புறப்பட்டு நீதிமன்றம், காக்கநாடு, துறைமுகம், வெலிங்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கு படகு இயக்கப்படவுள்ளது. ஒரு படகில் 100 பேர் வரை பயணிக்கலாம். இந்தப்படகில் குறைந்த கட்டணம் ரூ.20, அதிக கட்டணம் ரூ.40ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தேதி மாற்றம்? : அன்பில் மகேஷ் அறிவிப்பு!
யூ-டர்ன் திமுக : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!