வடகிழக்கு மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலை இன்று (மே 29) காணொலி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதுவரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் 17 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தொடர்ந்து நாட்டின் 18வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து நியூ ஜல்பைகுரி வரை செல்லும் இந்த ரயில் வடகிழக்கு மாநிலத்தில் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயில் ஆகும்.
சுமார் 410 கிலோ மீட்டர் தூர பயணத்தை ஐந்தரை மணி நேரத்தில் கடக்கும் என்பதால் பயணிகளுக்கு 1 மணி நேரம் பயணநேரம் குறையும். இந்த ரயில் நியூ ஜல்பைகுரியில் இருந்து காலை 6:10 மணிக்குப் புறப்பட்டு மதியம் கவுகாத்தியை வந்தடையும். மீண்டும் கவுகாத்தியில் இருந்து மாலை 4.30 மணிக்குப் புறப்பட்டு இரவு 10:20 மணியளவில் நியூ ஜல்பைகுரியை சென்றடையும்.
வாரத்தில் 6 நாட்கள் இயங்கும் இந்த ரயில் நியூ ஜல்பைகுரி மற்றும் கவுகாத்தி சந்திப்புகள் உட்பட நியூ அலிபுர்துவார், கோக்ரஜார், நியூ போங்கைகான் மற்றும் காமக்யா ஆகிய ஆறு நிலையங்களில் நின்று செல்லும்.
இன்று ரயில் சேவையைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, “வடகிழக்கு மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலின் துவக்கம் சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கும் மற்றும் வடகிழக்கு இணைப்புகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் காமாக்யா கோயில், காசிரங்கா சரணாலயம், அசாமில் உள்ள மனாஸ் புலிகள் காப்பகம், மேகாலயாவில் உள்ள ஷில்லாங் மற்றும் சிரபுஞ்சி மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் தவாங் போன்ற முக்கிய இடங்களை இணைப்பதன் மூலம் வணிக மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும்” என்று கூறினார்.
மோனிஷா
குவிந்த கண்டனங்கள்: சர்ச்சை பதிவை நீக்கிய அமைச்சர்!
“மருத்துவ கல்லூரிகளை தமிழக அரசு பராமரிக்கவில்லை”: அண்ணாமலை