உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் உடல்நல பாதிப்பினால், நேற்று (அக்டோபர் 2) குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல் நலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விசாரித்துள்ளார்.
82 வயதான முலாயம் சிங் யாதவ், உத்தரப் பிரதேச மாநிலத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்துள்ளார்.
தற்போது மணிப்புரி மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக முலாயம் சிங் யாதவ் உள்ளார்.

முலாயம் சிங் யாதவ் உடல்நலன் குறித்து சமாஜ்வாடி கட்சி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“மதிப்பிற்குரிய முலாயம் சிங் யாதவ் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை சீராக உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, சமாஜ்வாடி கட்சி தலைவரும் முலாயம்சிங் யாதவ் மகனுமான அகிலேஷ் யாதவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தந்தையின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.
மேலும், அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
ஆகஸ்ட் 22-ஆம் தேதி முதல் முலாயம் சிங் யாதவ் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீரக பிரச்சனை காரணமாக மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோரும் அகிலேஷ் யாதவை தொடர்புகொண்டு அவரது தந்தை உடல்நலம் குறித்து விசாரித்துள்ளனர்.
ராஜ்நாத்சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “முலாயம் சிங் யாதவ் உடல் நலக் குறைவால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் அறிந்ததும் அவரது உடல் நலன் குறித்து அகிலேஷ் யாதவிடம் கேட்டறிந்தேன்.
முலாயம் சிங் விரைவில் குணமடைய கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் முலாயம் சிங் யாதவ் விரைந்து உடல் நலம் பெற வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் முலாயம் சிங் மனைவி சாதனா குப்தா உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்