இத்தாலியில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று (ஜூன் 14) அதிகாலை அங்கு சென்றடைந்தார்.
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மோடி மூன்றாவது முறையாக கடந்த 9ஆம் தேதி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்
மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பிறகு மோடி முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலி சென்றுள்ளார்.
இத்தாலியில் ஜூன் 13ஆம் தேதி தொடங்கி ஜூன் 15ஆம் தேதி வரை 50ஆவது ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது.
கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாடு இத்தாலியில் உள்ள அபுலியாவில் நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனின் அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை ஏற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் இத்தாலி புறப்பட்ட பிரதமர் மோடி இன்று அதிகாலை அங்கு சென்றடைந்தார்.
இது தொடர்பாக மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “உலக தலைவர்களுடன் ஆக்கபூர்வமான விவாதங்களில் ஈடுபட ஆவலுடன் காத்திருக்கிறேன். உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதையும் பிரகாசமான எதிர்காலத்திற்கான சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், “2021 ஆம் ஆண்டு ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக நான் இத்தாலி சென்றதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மெலோனின் இரண்டு இந்திய பயணங்கள் மேற்கொண்டார். இது நமது இரு தரப்பு உறவில் வேகத்தையும் ஆழத்தையும் ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தது.
இந்தியா – இத்தாலி இடையேயான உறவை வலுப்படுத்தவும் இந்தோ பசிபிக் மற்றும் மத்திய தரைக் கடல் பகுதிகளில் ஒத்துழைப்பு மேம்படுத்தவும் நாங்கள் உறுதி கொண்டுள்ளோம்.
இன்று நடைபெறும் விவாதங்களின் போது செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் பிராந்தியம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.
இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின் முடிவுகள் மற்றும் ஜி7 உச்சி மாநாட்டின் முடிவுகள் இடையே அதிக ஒருங்கிணைப்பை கொண்டு வரவும், உலகளாவிய தெற்கிற்கு முக்கியமான பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவும் இது ஒரு வாய்ப்பாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
“படம் பிடிக்கலனா வெளியே சொல்லாதீங்க” : சர்ச்சையாகும் எம்.எஸ்.பாஸ்கர் பேச்சு!
வேலைவாய்ப்பு : டி.என்.பி.எல் நிறுவனத்தில் பணி!