பிரிக்ஸ் மாநாடு: தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார் மோடி

இந்தியா

பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடங்கும் நிலையில், அதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 22) காலை தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்.

பிரிக்ஸ் அமைப்பு என்பது பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கியதாகும். இந்த நாடுகளின் கூட்டமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் ஆகஸ்ட் 22ம் தேதியான இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 24-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் குறிப்பாக உறுப்பு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் பொது கரன்சி உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் அச்சுறுத்திய கொரோனா தொற்று காரணமாக இந்த 5 நாட்டு தலைவர்களும்  காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டனர்.

சமீபத்தில் மாநாட்டை நடத்தும் தென் ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா அழைப்பு விடுத்த நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி தற்போது மாநாட்டில் நேரடியாக பங்கேற்கிறார்.

இதற்காக பிரதமர் மோடி இன்று காலை 7 மணியளவில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் தென்ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றார்.

இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்களான சீன அதிபர் ஜின்பிங், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா ஆகியோரும் இந்த மாநாட்டில் நேரடியாக கலந்து கொள்கின்றனர்.

உக்ரைன் போர் காரணமாக ரஷ்ய அதிபர் புதினை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளதால், அவர் காணொலி வாயிலாக பங்கேற்கிறார்.

இதுதவிர பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் வங்காளதேசம், இந்தோனேஷியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க உள்ளார்கள்.

பிரிக்ஸ் அமைப்பில் மேலும் சில நாடுகளை சேர்த்து விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதற்கு இந்தியாவும், சீனாவும் ஒத்த கருத்துகள் கொண்ட நாடுகளை திறந்த மனதுடன் வரவேற்பதாக கூறியுள்ளன. இந்த அமைப்பில் இணைவதற்காக சுமார் 23 நாடுகள் விண்ணப்பித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரிக்ஸ் மாநாட்டை தொடர்ந்து பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினர் அல்லாத நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கும் ‘பிரிக்ஸ் – ஆப்பிரிக்கா அவுட்ரீச் மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்வார். அதன்படி பிரதமர் மோடி, பல்வேறு நாடுகளின் தலைவர்களை நேரில் சந்தித்து பேச உள்ளார்.

அதே நேரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குடன் நேரடி சந்திப்பு நடைபெறுமா? என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை. இது குறித்த கேள்விக்கு வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா ‘பிரதமர் மோடியின் இருதரப்பு சந்திப்புக்கான அட்டவணை இறுதி செய்யப்பட்டு வருகிறது’ என்று மட்டுமே பதிலளித்துள்ளார்.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டை தொடர்ந்து வரும் 25-ந்தேதி கிரீஸ் நாட்டுக்கு செல்கிறார். அங்கு கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிசை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளார். மேலும் அங்கு வாழும் இந்தியர்களை சந்தித்து பிரதமர் கலந்துரையாடுவார் என்றும் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் கிரீஸ் நாட்டுக்கு இந்திய பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறக்கக் கூடாது: பாஜகவினர் போராட்டம்!

அடுத்த 3 மணி நேரத்தில் மழை: எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

 

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *