”தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகியவற்றில் இளைஞர்கள் புலமை பெற வேண்டும் என வள்ளலார் விரும்பினார்” என்று பிரதமர் மோடி இன்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
வள்ளலாரின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த வள்ளலாரின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார்.
ஜீவகாருண்ய வாழ்க்கை!
அவர் பேசுகையில், “வள்ளலார் என்று அழைக்கப்படும் ஸ்ரீ ராமலிங்க அடிகளாரின் இருநூறாவது பிறந்தநாளைக் குறிக்கும் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றுவது பெருமை அளிக்கிறது. வள்ளலார் நாம் மிகவும் மதிக்கப்படும் மகான்களில் ஒருவர். இந்த பூமியில் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அவரது ஆன்மீக நுண்ணறிவு இன்றும் மில்லியன் கணக்கான மக்களை ஊக்கப்படுத்துகிறது. அவரது தாக்கம் உலகளாவியது. அவரது எண்ணங்கள் மற்றும் இலட்சியங்களில் பல அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
வள்ளலாரை நாம் நினைவுகூரும்போது, அவரது அக்கறை மற்றும் கருணை உணர்வு நினைவுக்கு வருகிறது. சக மனிதர்களிடம் இரக்கம் காட்டும் ஜீவகாருண்யத்தின் அடிப்படையிலான வாழ்க்கை முறையை அவர் நம்பினார். அவரது மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று பசியை நீக்குவதற்கான அவரது வலுவான அர்ப்பணிப்பு ஆகும்.
ஒரு மனிதன் வெறும் வயிற்றில் படுக்கைக்குச் செல்வதை விட வேறு எதுவும் அவருக்கு வலியை ஏற்படுத்தவில்லை. பசியோடு இருப்பவர்களுடன் உணவைப் பகிர்ந்துகொள்வது என்பது கருணையின் மிக உன்னதமான செயல் என்று அவர் நம்பினார். வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று அவர் கூறியுள்ளார்.
பசியாக இருக்கக்கூடாது என்பது உறுதியேற்போம்!
சமூக சீர்திருத்தங்களில் வள்ளலார் தனது காலத்தில் ஒரு முன்னோடியாக இருந்தார். வள்ளலாரின் மார்க்கம் மதம், சாதி, சமயம் என்ற தடைகளைத் தாண்டிச் சென்றது. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் தெய்வீகத்தைக் கண்டார். இந்த தெய்வீக தொடர்பை மனிதகுலம் அங்கீகரிக்கவும் போற்றவும் அவர் வலியுறுத்தினார்.
வள்ளலாரின் இந்த இருநூறாவது பிறந்தநாளில் அவருடைய இலட்சியங்களை நிறைவேற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவோம். அன்பு, கருணை மற்றும் நீதி பற்றிய அவரது செய்தியை பரப்புவோம். அவருடைய இதயத்திற்கு நெருக்கமான பகுதிகளில் நாமும் கடினமாக உழைத்துக்கொண்டே இருப்போம். நம்மைச் சுற்றியுள்ள யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வோம். ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வோம்.” என்று பிரதமர் மோடி பேசினார்.
சமஸ்கிருதம் படிக்க விரும்பினார்!
இதற்கிடையே கல்வியில் வள்ளலாரின் பங்கு குறித்து பிரதமர் பேசுகையில், ”வள்ளலாரின் படைப்புகளும் எளிதாக படித்து புரிந்து கொள்ளக்கூடியவை. எனவே சிக்கலான ஆன்மீக ஞானத்தை எளிய வார்த்தைகளில் அவரால் தெரிவிக்க முடியும்.
வள்ளலார் கற்றல் மற்றும் கல்வியின் ஆற்றலை நம்பினார். ஒரு வழிகாட்டியாக, அவரது கதவு எப்போதும் திறந்தே இருந்தது. எண்ணற்ற மக்களுக்கு வழிகாட்டினார். நவீன பாடத்திட்டங்களுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவம் முக்கியமானது. இளைஞர்கள் தமிழ், சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்” என்று மோடி பேசினார்.
"தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகியவற்றில் இளைஞர்கள்
புலமை பெற வேண்டும் என்று வள்ளலார் விரும்பினார்": மோடி.
சமஸ்கிருதத்தையும் சனாதனத்தையும் எதிர்த்தவர், தமிழுக்கே
இதயத்திலும் எழுத்திலும் இடமளித்தவர் வள்ளலார். அவருக்கும்
ஒரு மும்மொழித் திட்டமா! கூத்தடிப்புக்கு அளவில்லை.— arunan (@Arunan22) October 5, 2023
குவியும் கண்டனம்!
சனாதனத்திற்கும், சாதிய கொடுமைகளுக்கு எதிராக களமாடிய வள்ளலாரை, சனாதனத்தின் உச்சநட்சத்திரம் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.
தற்போது அவரது மாளிகையில் நடைபெற்ற வள்ளலாரின் 200வது பிறந்தநாள் விழாவில், இளைஞர்கள் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று வள்ளலார் விரும்பியதாக மோடி கூறியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து பல்வேறு தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் பிரதமர் மோடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இரட்டை வேடம்… கெட்டவார்த்தை: விஜயின் லியோ டிரெய்லரில் LCU குறியீடு?
விஷாலின் லஞ்ச புகார்: மூன்று பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு!
Modi joke for the day. Let’s ignore.