மணிப்பூரில் நடந்த வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி தொடர் மவுனம் சாதித்த நிலையில் அவரது மவுனத்தை உடைப்பதற்காகவே நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை 26ஆம் தேதி எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.
இந்த தீர்மானத்தின் மீது கடந்த 3 நாட்களாக எதிர்க்கட்சிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே அனல் பறக்கும் விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் இறுதி நாளான இன்று (ஆகஸ்ட் 10) நாடாளுமன்றத்திற்கு மாலை 4 மணியளவில் வருகை தந்த பிரதமர் மோடி பதில் அளித்து வருகிறார்.
அவர் தனது உரையில், ”21 ஆம் நூற்றாண்டு காலம் இந்தியாவின் காலகட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பைக் கொண்டுவருகிறது, நாம் மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். நாடு தற்போது அர்ப்பணிப்புடனும் முயற்சியுடனும் இப்போது எதைச் சாதிக்கிறதோ அது அடுத்த1,000 ஆண்டுகளுக்கு பயனளிக்கும்.
ஊழலற்ற ஆட்சியை இந்தியாவுக்கு வழங்கினோம், இந்தியாவின் இளைஞர்கள் உயர வாய்ப்புகள், உலகளவில் இந்தியாவின் நற்பெயரை மேம்படுத்தினோம்.
“கொரோனா சமயத்தில், இந்திய விஞ்ஞானிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை உருவாக்கினர். ஆனால் காங்கிரசுக்கு அதில் நம்பிக்கை இல்லை. காங்கிரஸ் கட்சி வெளிநாட்டு தடுப்பூசியை நம்பியது. அவர்கள் இந்தியாவையும் அதன் மக்களையும் நம்பவில்லை.
காங்கிரஸ் ஆட்சியில், இந்தியப் பொருளாதாரம் பத்தாவது அல்லது 11வது இடத்தில் தள்ளாடிக்கொண்டிருந்தது. 2014க்குப் பிறகு, முதல் 5 பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது.
ஹெச்ஏஎல் மற்றும் இந்தியாவின் பாதுகாப்புத் துறை அழிந்துவிட்டதாகச் சொன்னார்கள். இன்று, ஹெச்ஏஎல் வெற்றியின் புதிய சாதனைகளை படைத்துள்ளது.
இந்தியாவின் முன்னேற்றத்தை நம்பாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களின் நம்பிக்கையை அவர்களால் பார்க்க முடியவில்லை. இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் மக்களின் தன்னம்பிக்கையை தோல்வியடையச் செய்ய எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. உண்மையில் இந்திய மக்களுக்கு காங்கிரஸ் மீது நம்பிக்கை இல்லை.
எதிர்கட்சிகள் தங்களால் இயன்ற அளவு பாராளுமன்றத்திற்கு புறம்பான வார்த்தைகளை பயன்படுத்தினர். மக்கள் இரவும் பகலும் என்னை சபிக்கிறார்கள், அவர்களுக்கு பிடித்தது ‘மோடி உங்கள் கல்லறை தோண்டப்படும்’ என்பது தான். நான் அவர்களின் வசவுகளை ஒரு டானிக்காக குடிக்கிறேன்.
ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி என்றால் இந்தியாவை உலகின் மூன்றாவது மிக உயர்ந்த பொருளாதாரமாக மாற்றுவதற்கான வழிகளை கேட்டிருக்கும். ஆனால் காங்கிரஸ் அதனை செய்யவில்லை. காங்கிரசுக்கு எந்த நோக்கமும் தொலைநோக்கு பார்வையும் கிடையாது.
முன்னேற்றம் ஒரு மாயா ஜாலாத்தால் நடந்ததாக காங்கிரஸ் நினைக்கலாம். ஆனால் சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் மற்றும் கடின உழைப்பு அதனால்தான் இந்தியா இருக்கும் இடத்தில் உள்ளது.
காங்கிரஸின் வரலாறு அவர்கள் நாட்டின் திறனை நம்புவதில்லை. பாகிஸ்தானின் வார்த்தைகளை அவர்கள் நம்பினர். பாகிஸ்தான் மீது அவர்களுக்கு இருந்த காதல், பாகிஸ்தானின் வார்த்தைகளை அவர் உடனடியாக நம்பும் அளவுக்கு இருந்தது.
தமிழக அமைச்சர் ஒருவர், தமிழ்நாடு இந்தியாவின் அங்கம் இல்லை… இப்படிப்பட்டவர்கள் கூட்டணியில் இருக்கும் போது இந்தக் கூட்டணி எங்கே போகும்? திமுக சொந்தப் பெயர்களில் திட்டங்களை வகுத்து கோடிக்கணக்கில் ஊழல் செய்தார்கள்.
கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டு, தற்போது அதனை மீட்டுதரும்படி தமிழக முதல்வர் எனக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.
மேற்கு வங்கத்தில், டிஎம்சி இடதுசாரிகளுக்கு எதிராகவும், டெல்லியில் ஒன்றாகவும் உள்ளது. கடந்த ஆண்டு கேரளாவின் வயநாட்டில் அதன் அலுவலகத்தை சேதப்படுத்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸுக்கு நட்பு உள்ளது.
பெயரை மாற்றிக்கொண்டு இந்தியாவை ஆளலாம் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணி, என்.டி.ஏ.வை திருடி, திமிர்த்தனமாக அதில் இரண்டு ஐயை நுழைத்தது. ‘I.N.D.I.A ஆனது 26 கட்சிகள் மற்றும் ஒரு குடும்பத்தின் ‘I’ ஐ உள்ளடக்கியது. பழைய துருப்பிடித்த வாகனத்தை நவீன மின்சார வாகனமாகக் காட்ட எதிர்க்கட்சி முயற்சிக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு, பெங்களூருவில் யுபிஏ தகனம் செய்யப்பட்டது. எனது அனுதாபங்களை முன்பே தெரிவித்திருக்க வேண்டும். இந்தியாவைப் பற்றி எதுவும் புரியாதவர்களை நீங்கள் பின்தொடர்கிறீர்கள்” என்று பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருகிறார்.
இதற்கிடையே மணிப்பூர் வன்முறை தொடர்பாக பேசுவதற்காக தான் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால் கடந்த ஒன்றரை மணி நேரமாக மக்களவையில் பேசி வரும் மோடி, மணிப்பூரை தவிர்த்து பாஜக ஆட்சியின் சாதனை, எதிர்காலம் மற்றும் எதிர்கட்சிகள் மீதான விமர்சனத்தை மட்டுமே பேசி வ்ருகிறார்.
இதனையடுத்து, பிரதமர் மோடியின் பேச்சுக்கிடையே ‘ மணிப்பூர்’, ’மணிப்பூர்’ என்று எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
நம்பிக்கையில்லா தீர்மானம்: எதிர்கட்சிகளுக்கு நன்றி தெரிவித்த பிரதமர்
கிரிவலப் பாதையில் அசைவ உணவுகள் கூடாது: ஆளுநர் ஆர்.என்.ரவி