ரிமால் புயலை சமாளிப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி இன்று (மே 26) துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
வங்ககடலில் உருவான ரிமால் புயல் இன்று அதிதீவிர புயலாக வலுப்பெற்றது. இது தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து மேற்கு வங்க மாநில கடற்கரையை ஒட்டியுள்ள சாகர் தீவு மற்றும் கெபுபாரா இடையே இன்று இரவு கரையை கடக்க உள்ளது.
புயல் கரையை கடக்கும் போது, காற்றின் வேகம் மணிக்கு 135 கி.மீ வேகத்தில் வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலின் காரணமாக மேற்கு வங்கம், திரிபுரா மாநிலங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் விமானங்கள் மற்றும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாநிலத்தில் கடற்கரையோரம் வசிக்கும் 1.10 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், ரிமால் புயலை சமாளிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது புயலை எதிர்கொள்வதற்கு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது? புயல் பாதித்த பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சிறையில் அடைப்பேன் என மிரட்டுவதா? – மோடியை சாடிய தேஜஸ்வி