இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் நோன்பு தொடங்கியதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுவது ரமலான் நோன்பு. சகோதரத்துவத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக இஸ்லாமியர்களால் ரமலான் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும்.
ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் காலை சூரிய உதயம் முதல் மாலை சூரியன் மறையும் வரை தண்ணீர், உணவு எடுத்துக் கொள்ளாமல் நோன்பிருந்து தாராவீஹ் என்ற சிறப்புத் தொழுகை செய்த பின்னர் ஒவ்வொரு நாளும் நோன்பை முடித்துக் கொள்வார்கள்.
வளைகுடா நாடுகளில் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து ரமலான் நோன்பு தொடங்கியதை அடுத்து தமிழ்நாட்டிலும் மார்ச் 24 ஆம் தேதி முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிவாசலிலும் நேற்று (மார்ச் 23) சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதனையடுத்து இன்று முதல் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.
ரமலான் நோன்பிருக்கும் இஸ்லாமியர்களுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ரமலான் நோன்பிருக்கும் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில், ”ரம்ஜான் தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா