நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
நேற்று நடந்த தொழிலாளர் கட்சியின் வருடாந்திர கூட்டத்தில் ஜெசிந்தா ஆர்டெர்ன் பேசுகையில், “இனிமேலும் பிரதமர் பணியை மேற்கொள்ள என்னிடம் போதுமான ஆற்றல் இல்லை. நான் பிரதமர் பதவியை அடுத்த மாதம் ராஜினாமா செய்ய உள்ளேன். ஏனென்றால் இதனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பாக நான் கருதுகிறேன்.
இந்த வேலை எவ்வளவு கடினமானது என்று எனக்கு தெரியும். நாம் அனைவரும் மனிதர்கள் தான். என்னால் முடிந்தவரை எனது பணிகளை நான் ஆற்றியுள்ளேன். இது எனது பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதற்கு தகுந்த நேரமாக கருதுகிறேன்.எங்களால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதால் நான் ராஜினாமா செய்யவில்லை. தேர்தலில் எங்களால் வெற்றி பெற முடியும் என்று நான் நம்புகிறேன்.” என்று தெரிவித்தார்.
உலகின் மிகவும் இளைய பெண் பிரதமராக, கடந்த 2017-ஆம் ஆண்டு 37 வயதில் ஆர்டெர்ன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நியூசிலாந்தில் கொரோனா தொற்றை சிறப்பாக கையாண்ட ஜெசிந்தா ஆர்டென், அந்த நாட்டில் ஏற்பட்ட பணவீக்கம் மற்றும் நிதி நெருக்கடிகளை சமாளிக்க தவறியதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை எழுப்பி வந்தன.
இந்தநிலையில் சமீபத்திய தேர்தல் கருத்துக்கணிப்புகளில் ஜெசிந்தா ஆர்டெர்னின் தொழிலாளர் கட்சி தோல்வியை சந்திக்கும் என்றும் கிறிஸ்டோபர் லக்சனின் வலது சாரி தேசிய கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியானது. இதனை தொடர்ந்து ஜெசிந்தா ஆர்டென் பிரதமர் பதவியிலிருந்து விலகும் முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டு அக்டோபர் 14-ஆம் தேதி நியூசிலாந்து பிரதமர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஜெசிந்தா ஆர்டெர்ன் பிப்ரவரி 7-ஆம் தேதி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். தொழிலாளர் கட்சியின் நிதி அமைச்சர் கிராண்ட் ராபர்ட்சன் ஜெசிந்தாவிற்கு மாற்றாக பிரதமர் பதவி வகிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
செல்வம்