துபாயில் இருந்து பெஷாவார் செல்ல வேண்டிய விமானத்தை பாகிஸ்தான் விமானி ஒருவர் கராச்சி ஓட்டி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று துபாயில் இருந்து பெஷாவர் நோக்கி பறந்து கொண்டிருந்தது. ஆனால், இந்த விமானம் பெஷாவருக்கு பதிலாக கராச்சியில் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, விமான நிலையத்தில் பாதுகாப்புப்படை வீரர்கள் முன்னிலையில் பயணிகள் விமானியிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக இம்தியாஸ் மக்முத் என்பவர் வீடியோ வெளியிட்டு ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். அந்த விமானி பாகிஸ்தான் ஏவியேஷனில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்றும் 1,500 கி.மீ தவறாக ஓட்டி வந்தாலும் நல்லபடியாக விமானத்தை லேண்ட் செய்தாரே அதற்கு பாராட்டு. ஐரோப்பிய வான் வெளியில் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானங்கள் ஏன் அனுமதிக்கப்படுவதில்லை என்பதற்கு இப்போது தனக்கு விளக்கம் கிடைத்துள்ளதாக கேலியாக கூறியுள்ளார்.
இந்த வீடியோ வைரலானதையடுத்து, பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் அவசர அவசரமாக மறுப்பு தெரிவித்துள்ளனர். அதாவது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே விமானம் கராச்சி விமானத்தில் விமானியால் தரையிறக்கப்பட்டது என்றும் தவறுதலாக தரையிறக்கப்படவில்லை என்றும் பதில் அளித்திருந்தனர்.
அப்படி, தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் கராச்சியில் தரையிறக்கப்பட்டால், அது குறித்து பயணிகளுக்கும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லையே ஏன் என்கிற கேள்வி இங்கே எழுகிறது அல்லவா?
இப்படியாக அவசரம் அவசரமாக விமானியை பாதுகாக்க, பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் முயல்வதற்கு பின்னணியில் ஒரு காரணம் உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு லைசென்ஸ் இல்லாத விமானிகள் உள்பட பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு ஐரோப்பிய வான் வெளியில் பறக்க அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் கூட ஐரோப்பிய யூனியன் விமான பாதுகாப்புக் குழு பாகிஸ்தான் சென்று பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களை ஆராய்ந்தது. எனினும், பாகிஸ்தான் விமானங்களுக்கு ஐரோப்பிய யூனியனில் பறக்க இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, இந்த சம்பவத்தால் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் பதறி போயுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
லெபனான் – தயாரிப்பு நிறுவனத்துக்கு தெரியாமலேயே பேஜரில் குண்டு : அதிர்ச்சித் தகவல்!