பெட்ரோல் விலை 2.12% குறைந்துள்ளது: பெட்ரோலியத் துறை அமைச்சர்!

Published On:

| By Minnambalam

வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும்  இந்தியாவில் பெட்ரோல் விலை 2.12% குறைந்துள்ளது என்றும்பெட்ரோலியத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியா எரிசக்தி வாரம் 2023 நிகழ்ச்சியையொட்டி லோகோவை வெளியிட்ட ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், “உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்ள இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சுய-சார்பு நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது.

பிரதமரின் தொலைநோக்கு தலைமையின் கீழ், சுய-சார்பு நடவடிக்கைத் தொடர்பான முதலீட்டை ஊக்குவிக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

பெட்ரோலில் எத்தனாலை 10 சதவிகிதம் கலப்பது, 2ஜி சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மத்திய அரசின் உறுதிப்பாட்டின் அடையாளமாகும்.

வளர்ந்த நாடுகளில் எரிபொருள் விலை உயர்வு மிக அதிகமாக இருக்கிறது. அதை ஒப்பிடுகையில் இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 22 வரையிலான காலகட்டத்தில் பெட்ரோல் விலையில் கிட்டத்தட்ட 40% பணவீக்கம் கணிசமாக உயர்ந்துள்ளது, இந்தியாவில் பெட்ரோல் விலை 2.12% குறைந்துள்ளது.

எரிவாயு விலையில் கூட கடந்த 24 மாதங்களில், சவுதி விலை கிட்டத்தட்ட 303% அதிகரித்துள்ளது.

அதே காலகட்டத்தில், இந்தியாவில் எல்பிஜி விலை அந்த எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவாக, அதாவது 28% அதிகரித்துள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் நிகழும் ஏற்ற இறக்கத்தைக் குறைக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல்-டீசல்-ஜிஎஸ்டி: நிர்மலாவுக்கு பிடிஆர் பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share