சென்னை விமான நிலையத்தில் அத்துமீறி நுழைந்த நபரிடம் சுங்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் நுழைவு வாயில் முதல் விமானம் ஏறும் வரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். தீவிர சோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுவர். எனினும் தங்கம், போதைப் பொருட்கள் கடத்தல் நிகழ்வுகள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது.

அந்த வகையில் ஹபீப் முகமது சேகு என்பவர் விமான நிலையத்துக்குள் வருகை பகுதியில் நுழைந்துள்ளார். அவரை கண்டதும் சந்தேகத்திற்கிடமாக இருக்கிறார் என்று கண்காணித்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். சோதனை செய்ததில் மத்திய விமானப் பாதுகாப்புப் படை அலுவலகம் மூலம் பாஸ் வாங்கி உள்ளே வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பாஸ்போர்ட் மூலம் சென்னையை சேர்ந்த நபர் என்பதும் தெரியவந்தது. அவருடைய போனையும் கைப்பற்றி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். விசாரணையில் உறவினர் ஒருவரை வரவேற்க வந்ததாகக் கூறியுள்ளார். ஆனாலும் சுங்கத்துறையினர் அவரது போனில் கடைசியாக பதிவான எண்களைச் சோதித்தனர். அதில் துபாய் மற்றும் கொழும்புவிற்கு பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. இவருடன் தொடர்பு கொண்டவர்களிடம் சுங்கத்துறையினர் பேசி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மத்திய விமானப் பாதுகாப்புப் படை அலுவலகம் பெறப்பட்ட பாஸ் எப்படி வந்தது என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.
சமீப நாட்களாகச் சென்னை விமான நிலையத்தில் துபாய் மற்றும் இலங்கையிலிருந்து கடத்தி வரப்படும் தங்கம், வைரம், போதைப் பொருட்கள் அதிகளவு பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்த நபர் துபாய் மற்றும் கொழும்பிற்குப் பேசியிருப்பது அதிகாரிகளிடையே சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
பிரியா