பெங்களூருவில் பெண் ஒருவர் கார் பேனட் மீது விழுந்த நபரை ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் சில தினங்களுக்கு முன் இளைஞர் ஒருவர், முதியவரை இருசக்கர வாகனத்தின் பின்னால் இழுத்துச் சென்ற காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பெண் ஒருவரும் காரின் மீது இருந்த நபரை ஈவு இரக்கமின்றி ஒரு கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற நிகழ்வு அரங்கேறியுள்ளது.
பெங்களூரு நகரில் ஞானபாரதி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் டாடா நிகாசான் காரில் பிரியங்கா என்ற பெண்மணி சென்று கொண்டிருந்தார்.
அப்போது தர்ஷன் என்பவர் சென்று கொண்டிருந்த ஷிப்ட் காரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இதனால் தர்ஷன் மற்றும் அவரது நண்பர்கள் பிரியங்கா சென்ற காரை தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளனர்.
ஆனால் பிரியங்கா காரை நிறுத்தாமல் செல்லவே தர்ஷன் அந்த காரை பின் தொடர்ந்து சென்று காரின் முன்பகுதியில் தாவி உள்ளார்.
தர்ஷன் பேனட் மீது தொங்கி கொண்டிருந்த நிலையிலும் பிரியங்கா காரை நிறுத்தாமல் மிகவும் அச்சுறுத்தும் வகையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வேகமாக சென்றுள்ளார்.
அவரை விரட்டி கொண்டு பின் தொடர்ந்து சென்ற தர்ஷன் நண்பர்கள் காரை தடுத்து நிறுத்தி, பேனட் மீது சிக்கி இருந்த தர்ஷனை மீட்டனர்.
பின்னர் ஞான பாரதி காவல் நிலையத்திற்கு பிரியங்காவை அழைத்து சென்று புகார் அளித்தனர்.
காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் எதிராக புகார் கொடுக்க இருதரப்பு மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்ஷன் கார் பேனட் மீது சிக்கி இருந்த போது பிரியங்கா வேகமாக காரை ஓட்டி செல்லும் வீடியோ தற்பொழுது வைரலாக பரவி வருகிறது.
கலை.ரா