பெகாசஸ் விவகாரம் – மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை : விசாரணைக்குழு!

இந்தியா

பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசு விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், அரசியலமைப்புப் பதவியில் இருப்போர், தொழிலதிபர்கள் எனப் பலரது செல்போன்கள், இஸ்ரேலின் பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுக்கேட்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. மூத்த பத்திரிகையாளர் என்.ராம் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது நாட்டின் பாதுகாப்பு தொடர்புடையது. கவலைக்குரிய விஷயம் என்று கூறி 2021 அக்டோபர் 27ஆம் தேதி பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஒரு தொழில்நுட்ப குழுவை அமைத்தது.

முன்னாள் நீதிபதி ஆர்.வி ரவீந்திரன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு பலரது செல்போன்களை ஆய்வு செய்து விசாரணை செய்தது.

கடந்த மே மாதம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது இதுதொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய அவகாசம் கோரியது.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 25) தலைமை நீதிபதி என்.வி ரமணா, நீதிபதி சூரிய காந்த் மற்றும் நீதிபதி ஹிமா கோஹ்லி முன்பு இக்குழு விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்தது.

அப்போது தலைமை நீதிபதி, “29 தொலைபேசிகளை ஆய்வு செய்ததில் ஐந்து போன்களில் மால்வேர் இருப்பது கண்டறியப்பட்டது.

ஆனால் பெகாசஸ் ஸ்பைவேர் இருப்பதற்கான உறுதியான ஆதாரம் இல்லை என்று இக்குழு தெரிவித்துள்ளது.

அதுபோன்று இதுகுறித்த விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என்றும் கூறியுள்ளது” எனக் கூறினார்.

மேலும் பாதுகாப்பு கருதி, இந்த அறிக்கையை முழுமையாகப் பொதுவெளியில் வெளியிடமுடியாது, அறிக்கையின் மூன்றாவது பகுதியை மட்டும் வெளியிடுகிறோம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

அப்போது மனுதாரர்களில் சிலர் அறிக்கையின் முதல் இரண்டு பாதி எங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டனர். அதற்கு இதுகுறித்து பரிசீலிப்பதாகத் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

முழுமையான அறிக்கையை ஆய்வு செய்யாமல் மேலும் கருத்துகளை தெரிவிக்க நாங்கள் விரும்பவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

சைபர் தாக்குதல்களை விசாரிப்பதற்கும், நாட்டின் இணைய பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்துவதற்கும் சிறப்புப் புலனாய்வு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் இக்குழு பரிந்துரைத்துள்ளது.

பிரியா

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மாயம் : கெஜ்ரிவால் அதிர்ச்சி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.