Patanjali Case: Supreme Court Question

’முழு பக்க அளவில் மன்னிப்பு கேட்க வேண்டும்’ : பதஞ்சலி வழக்கில் உத்தரவு!

இந்தியா

”பதஞ்சலி நிறுவனம் செய்தித்தாள்களில் வெளியிட்ட பொது மன்னிப்பு, அவற்றின் விளம்பரங்களைப் போல ஏன் பெரிதாக இல்லை?” என உச்சநீதிமன்றம் இன்று (ஏப்ரல் 23) கேள்வி எழுப்பியது.

பதஞ்சலி நிறுவனம் உண்மைக்கு புறம்பான விளம்பரங்களை வெளியிடுவதாகவும், குணப்படுத்தவே முடியாத நோய்களையும் தங்களது மருந்துகளால் சரிப்படுத்த முடியும் எனவும் தவறான விளம்பரங்களை வெளியிட்டு வருவதாக இந்திய மருத்துவக் கழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பதஞ்சலி நிறுவனம் சார்பாக தவறான விளம்பரங்கள் வெளியிடப்பட்டது உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பரில் பதஞ்சலி நிறுவனத்தின் அனைத்து விளம்பரங்களையும் நிறுத்தவும், ரூ.1 கோடி அபராதம் விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், அவமதிப்பு நோட்டீஸ்களுக்கு பதிலளிக்குமாறு ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோரை நேரில் ஆஜராகுமாறு உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியது. தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் சமர்ப்பித்த பதஞ்சலியின் மன்னிப்புப் பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றம் நிராகரித்தது.

தொடர்ந்து, ஏப்ரல் 16-ம் தேதி, ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் கோரிய மன்னிப்புகளுக்கு நீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படையாகத் தெரிவித்தது.

இருவரின் மன்னிப்பும் நேர்மையானவையாக இல்லாமல் கட்டாயப்படுத்தப்பட்டதாக தோன்றியதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். அறிவியல் ஆதாரம் இல்லாமல் நோயைக் குணப்படுத்துவதாக தவறான விளம்பரத்தை வெளியிட்டது மிகவும் கண்டத்திற்குரியது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து, இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் ஹிமா கோஹ்லி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஏப்ரல் 23) விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா இருவரும் நேரில் ஆஜராகினர்.

அப்போது, பதஞ்சலியின் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, நேற்று வெளியான செய்தித்தாள்களில் பதஞ்சலியின் மன்னிப்பு விளம்பரங்கள் வெளியானதாக தெரிவித்தார்.

அதற்கு நீதிபதி ஹிமா கோஹ்லி, “உங்களது மன்னிப்புக் கோரும் விளம்பரங்கள் பூதக் கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவிற்கு சிறியதாக உள்ளது. உங்கள் விளம்பரங்களின் அளவுக்கு மன்னிப்பு கடிதம் ஏன் பெரியதாக இல்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு ரோஹத்கி, “அப்படி வெளியிட பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவாகும். ஏற்கெனவே பதஞ்சலியின் மன்னிப்பு 10 லட்ச ரூபாய் செலவில் 67 செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டுள்ளது.” என்று பதிலளித்தார்.

”அப்படியா? நீங்கள் வெளியிட்ட  விளம்பரங்களுக்கு பத்து லட்சம் ரூபாய் செலவா? நாங்கள் ஆச்சரியப்படுகிறோம். அடுத்த முறை உண்மையான செய்தித்தாள் மன்னிப்பு விளம்பரத்தை வெட்டி, அவற்றை கைவசம் வைத்திருங்கள். அதற்கு மாறாக அதனை பெரிதாக்கி நகலெடுத்து கொண்டு வராதீர்கள். நாங்கள் விளம்பரத்தின் உண்மையான அளவை பார்க்க விரும்புகிறோம்” என நீதிபதி கோஹ்லி கூறினார்.

தொடர்ந்து ”மன்னிப்பு கோரும் புதிய விளம்பரங்களை பெரிய அளவில் வெளியிட வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் இந்த வழக்கின் மீதான விசாரணையை ஏப்ரல் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வெறுப்பு பேச்சு : மோடி மீது வழக்கு பதிவு கோரும் திருமா

14 வருடங்களுக்கு பிறகு… சிம்புவிற்கு ஜோடியான திரிஷா..!

+1
0
+1
1
+1
0
+1
6
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *