ரத்தன் டாடா மறைவு: டவர் ஆஃப் சைலன்ஸ்… பார்சிக்களின் வித்தியாசமான இறுதிச்சடங்கு!

இந்தியா

தொழிலதிபர் ரத்தன் டாடா பார்சி இனத்தை சேர்ந்தவர். இவர்களது இறுதிச்சடங்கு செய்யும் முறை சற்று வித்தியாசமானது.

பொதுவாக இந்தியாவில் உள்ள பல்வேறு இனமக்களும் சடலங்களை எரிப்பதையோ அல்லது புதைப்பதையோ வழக்கமாக கொண்டிருக்கின்றனர். ஆனால்,  பண்டைய காலங்களில் ஒருசில இனத்தவர்களின் இறுதிச்சடங்குகள் மிகவும் வித்தியாசமானதாக இருந்தது.

குறிப்பாக பார்சி இன மக்கள்  உடல்களை எரிக்கவும் மாட்டார்கள், புதைக்கவும் மாட்டார்கள். அதற்கு பதிலாக சடலங்களை பிணம்  தின்னும் கழுகுகளுக்கு உணவாக்கி விடுவார்கள்.

பெர்சியா என்று அழைக்கப்படும் ஈரானில் இருந்து வந்தவர்கள் பார்சிகள்.   பார்சி இன மக்களுக்கு ஜோரோஸ்ட்ரியர்கள் என்ற பெயரும் உண்டு. உலகில் மிகப் பழமையான மதமாக இது கருதப்படுகிறது. இவர்கள் இறுதிச்சடங்கிற்காக டவர் ஆப் சைலன்ஸ் என்னும் கட்டடத்தை பயன்படுத்தினார்கள்.

இது வட்ட வடிவில் காணப்படும். கட்டடத்தின் உட்பகுதி கழுகுகள் சடலங்களை வசதியாக உண்ணும் வகையில் கட்டப்பட்டிருக்கும்.  ஜோரோஸ்ட்ரியர்களின் குறிப்பு படி இந்த சடங்கு ஐந்தாம் நூற்றாண்டில் இருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த சடங்கிற்கு பின்னால் இருக்கும் முக்கிய காரணம் பூமி மற்றும் நெருப்புடன் உயிரற்ற  உடல்கள் தொடர்பு கொள்ளக்கூடாது என்பதுதான். ஏனெனில் இந்த மதத்தின்படி பூமி, நெருப்பு  இரண்டும்  மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. அவர்களின் பாரம்பரியத்தில் இறந்த உடல் ‘நசு’ என்று அழைக்கப்படுகிறது. அதாவது , அசுத்தமாக கருதப்படுகிறது.

மேலும் பிணம் தின்னும் பறவைகளை  சூரியனின் அடையாளமாகவும் இந்த மக்கள்  கருதினார்கள். இறந்தும் சேவை செய்ய வேண்டுமென்பதுதான் இந்த மதத்தின் முக்கிய நோக்கம்.  எனவே, கழுகுகளுக்கு உணவாகி சேவை செய்கிறார்கள் பார்சிகள். இதன் காரணமாக இறுதிச்சடங்குக்கு எந்த பணமும் தேவைப்படாது. பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை அனைவரும் ஒரே முறையில் பிணம்தின்னி கழுகுகளுக்கு வீசப்பட்டு விடுவார்கள். கல்லறைகளும் எழுப்ப மாட்டார்கள்.

மும்பையில் மலபார் ஹில் பகுதியில் 56 ஏக்கர் பரப்பளவில் டவர் ஆஃப் சைலன்ஸ் அமைந்துள்ளது. சுற்றிலும் காடுகளுக்கு மத்தியில் இது அமைந்துள்ளது.  ஆனால், இப்போது கழுகுகள் எண்ணிக்கை குறைந்து போனதாலும் மின்தகன மயானம் நடைமுறையில் உள்ளதால் பார்சி மக்கள் அதற்கு மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல், மும்பை வோர்லி மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது  என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

எம்.குமரேசன்

விமர்சனம் ; ’வேட்டையன் ‘!

கேலி பேசியவருக்கு உதவிய ரத்தன் டாடா : ‘ஜாகுவார்’ ,’லேண்ட் ரோவர்’ வாங்கிய கதை!

+1
2
+1
1
+1
0
+1
9
+1
1
+1
3
+1
4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *