‘ஃபெஞ்சல்’ பாதிப்பு குறித்து விவாதிக்க மறுப்பு… மக்களவை ஒத்திவைப்பு!
‘ஃபெஞ்சல்’ பாதிப்பு குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட அமளியால் மக்களவை இன்று ( டிசம்பர் 2) நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் பற்றி விவாதிப்பது தொடர்பான தீர்மானங்களை முன்வைத்தன.
ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நவம்பர் 25ஆம் தேதி நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் அதானி, மணிப்பூர் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டு வந்ததால், கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்றம் செயல்படவில்லை.
இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு சபா நாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியது. ஆனால், தங்களது தீர்மானங்கள் மக்களவையில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சிகள் “எங்களுக்கு நீதி வேண்டும்” எனக் கூச்சலிடத் தொடங்கினர்.
மேலும், ஃபெஞ்சல் புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும், அதற்கு தேவையான நிவாரணம் குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று திமுக தீர்மானம் முன்வைத்தது. ஆனால் அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் மக்களவையில் ஏற்பட்ட அமளியால், மக்களவையை 12 மணி வரை ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.
மக்களவை மீண்டும் 12 மணிக்கு கூடிய போதும், அமளி தொடர்ந்ததால், முழு நாளுக்கும் மக்களவையை சபா நாயகர் ஓம் பிர்லா ஒத்தி வைத்தார்.
இதற்கிடையில் மாநில அவையில் அதானி, மணிப்பூர், உத்தரப்பிரதேசம் சம்பலில் இடைத்தேர்தலின் போது நடந்த கலவரம் உள்ளிட்ட 20 தீர்மானங்கள் சபாநாயகர் ஜக்திப் தங்கர்க்கு முன் வைக்கப்பட்டது.
ஆனால் அதை எதையும் ஜக்திப் தங்கர் விவாதத்திற்கு ஏற்கவில்லை. இதனால் இங்கும் கூச்சல் குழப்பம் நிலவியதால், மாநிலங்களவையும் இன்று முழு நாள் ஒத்தி வைக்கப்பட்டது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விலங்குகள் போல பெண்களை… விஜய் சேதுபதி மீது ஜேம்ஸ் வசந்தன் பாய்ச்சல்!
கினியாவில் 100 கால்பந்து ரசிகர்கள் பலி… என்ன நடந்தது?