சிறப்பு கூட்டத்தொடர்: நிறைவேற இருக்கும் ’சர்ச்சை’ மசோதாக்கள்!

இந்தியா

நாட்டில் பொதுவாக ஆண்டுக்கு 3 தடவை நாடாளுமன்றம் கூடுவது வழக்கம். அதன்படி, கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து முடிந்தது.

இந்த நிலையில், 5 நாட்கள் கொண்ட சிறப்பு கூட்டத்தொடர் செப்டம்பர் 18-ந் தேதி (இன்று) முதல் 22-ந் தேதி வரை நடக்கும் என்று கடந்த மாதம் மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்தது.

இந்தக் கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்படாததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, நாடாளுமன்ற செய்தி இதழில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தேசியக்கொடி!

இதையொட்டி, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர் நேற்று தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

இது, புதிய கட்டிடத்துக்கு நாடாளுமன்றம் இடம்பெயருவதற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது

அனைத்துக்கட்சி கூட்டம்!

சிறப்புக் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்காக மத்திய அரசு  ஏற்பாடாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டிடத்தில் நேற்று மாலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில் பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். குறிப்பாக முன்னாள் பிரதமர் தேவகவுடா, கனிமொழி (தி.மு.க.), ராமமோகன் நாயுடு (தெலுங்குதேசம்), டெரிக் ஓ பிரையன் (திரிணாமுல் காங்கிரஸ்), சஞ்சய்சிங் (ஆம் ஆத்மி) உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்துக்குப்பின் பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி, ”மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது” என்றார்.

சிறப்பு கூட்டத்தொடர் தொடக்கம்!

பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று தொடங்கும் சிறப்புக் கூட்டத்தில், அரசியல் நிர்ணய சபையாக இருந்ததில் இருந்து கடந்த 75 ஆண்டுகால நாடாளுமன்ற பயணம், அதன் சாதனைகள், நினைவுகள், அனுபவங்கள், படிப்பினைகள் ஆகியவை குறித்து சிறப்பு விவாதம் நடைபெறுகிறது.

தொடர்ந்து இரண்டாம் நாளான நாளை முதல் புதிய கட்டிடத்தில் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டங்களில் பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

தலைமை தேர்தல் ஆணையர் நியமன மசோதா!

ஏற்கெனவே மத்திய அரசு பட்டியலிட்டுள்ள நிகழ்ச்சி நிரலின் படி சர்ச்சைக்குரிய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

இது தவிர வக்கீல்கள் திருத்த மசோதா, அஞ்சல் அலுவலக மசோதா, பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா ஆகியவை மக்களவையில் நிறைவேற்றப்பட உள்ளன.

இம்மசோதாக்கள் ஏற்கனவே மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய விவாதங்கள்!

எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையின் படி மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவும் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா – பாரத் பெயர் மாற்றம், சனாதன எதிர்ப்பு, மத்திய அரசு கொண்டு வர துடிக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல், நாடாளுமன்ற ஊழியர்களுக்கான தாமரை சின்னம் பொறித்த புதிய சீருடை போன்ற சர்ச்சைகளும், விலைவாசி உயர்வு, வேலையின்மை, மணிப்பூர் கலவரம், சீனா அத்துமீறல்  போன்ற பிரச்சனைகளும் இந்த சிறப்புக்கூட்ட தொடரில் புயலை கிளப்பும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

சுருண்டது ஆஸ்திரேலியா… தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா!

விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன்: 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

 

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *