கொரோனா பீதியில் வீட்டிற்குள் முடங்கிய குடும்பம்: கதவை உடைத்து மீட்ட அதிகாரிகள்!

Published On:

| By Jegadeesh

கொரோனா பீதியால் 3 ஆண்டுகளாக வீட்டிற்குள் முடங்கிய குடும்பத்தை மீட்ட அதிகாரிகள் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம் குடியேறு பகுதியை சேர்ந்தவர் சூரிபாபு. இவர் கூலி தொழிலாளியாக இருந்து வருகிறார். இவரது மனைவி பெயர் மணி. சூரிபாபு – மணி தம்பதியினருக்கு துர்கா பவானி என்ற மகளும் உள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் காரணமாக கணவன், மனைவி மற்றும் மகள் ஆகிய 3 பேரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்துள்ளனர்.

இதன் பின் தொற்று பரவல் குறைந்ததையடுத்து சூரிபாபு வேலைக்குச் சென்று வந்துள்ளார். ஆனால் சூரிபாபுவின் மனைவி மணி மற்றும் அவரது மகள் துர்கா ஆகியோர் வீட்டை விட்டு வெளியே வராமலும் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எந்த காரியத்திலும் பங்கேற்காமலும் அதனை தவிர்த்தும் வந்துள்ளனர்.

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவர்களை வெளியே வரும்படி அழைத்தும் அவர்கள் வர மறுத்துவிட்டனர்.

மேலும், எங்களுக்கு சூனியம் செய்ய வந்தீர்களா என்று கேட்டு கதவை திறக்காமல் அவர்களை திட்டி உள்ளனர்.

இதனால், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அவர்களிடம் பேசுவதை நிறுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, சூரிபாபு மட்டும் தினமும் காய்கறி வியாபாரத்திற்கு சென்று அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் பொருட்களை வாங்கி வந்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மனைவி மணியின் உடல்நிலை மோசமடைந்ததனால், சூரிபாபு தனது மனைவி வீட்டை விட்டு வெளியே வர மறுப்பதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்குமாறும் தூக்குத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கூறியுள்ளார்.

paralyzed corona family andhra

இதையடுத்து, சுகாதார துறையினர் சூரிபாபுவின் வீட்டிற்கு வந்து அழைத்தும் அவர்கள் கதவை திறக்கவில்லை.

உடனே, சுகாதார துறையினர் அப்பகுதி மக்கள் உதவியுடன் கதவுகளை உடைத்து உள்ளே நுழைய முயன்றனர்.

அப்போது தாயும், மகளும் சிகிச்சை பெற மறுத்ததுடன் சுகாதாரத்துறை ஊழியர்களை தாக்கியுள்ளனர்.

இதனால், அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருமணமாகி வந்த நாள் முதல் மாந்த்ரீகம் குறித்து மணி அதிகம் பேசி வந்ததாகவும், அதனை அவரது மகள் துர்காவிற்கும் சொல்லி வளர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இது அப்பகுதி மக்களிடத்தில் பீதியை கிளப்பியுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

“அலறப்போகுது ஆண்டவரால் டெல்லி” – வைரலாகும் போஸ்டர்!

கூட்டுறவு சங்க திருத்த மசோதா: திரும்பப் பெற்றது தமிழக அரசு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel