பாஸ்மதி அரிசி… இந்தியாவுக்கு அதிர்ச்சி தரும் பாகிஸ்தான்

Published On:

| By Kumaresan M

காஷ்மீர், கிரிக்கெட்டுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் வேறொரு விஷயத்திலும் மோதிக் கொண்டு இருக்கின்றன. அதுதான் பாஸ்மதி அரிசி. அரிசி ரகங்களில் ராஜாவான பாஸ்மதியை ‘வாசனையுள்ள முத்து’ என்று சொல்கிறார்கள்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரண்டும் பாஸ்மதியை பாகிஸ்தானை சேர்ந்தது என்று அங்கீகரித்துள்ளன. இது இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இமயமலையின் அடிவாரத்தில் உள்ள கங்கை சமவெளியில் இருந்து பாஸ்மதி முதன் முதலில் விளைவிக்கப்பட்டது என்று இந்தியா கூறி வருகிறது. பாகிஸ்தானோ தங்களின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள ஹபிசாபாத் மாவட்டத்தில் பாஸ்மதி விளைவிக்கப்பட்டதாக கூறி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளை நம்ப வைத்துள்ளது.

இதனால், பாஸ்மதி அரிசிக்கான மிகப் பெரிய சந்தையாக பார்க்கப்படும் ஐரோப்பிய யூனியனும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளின் முடிவை பின்பற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சமீப காலமாக பாஸ்மதி அரிசி பிரியாணி மற்றும் புலாவ் தயாரிக்க அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. 6.6 மில்லி மீட்டர் நீளமும் 2 மில்லி மீட்டர் அகலமும் கொண்டது இந்த அரிசி. உலகளவில் அரிசிக்கு 27 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சந்தை உள்ளது.

வரலாற்று ரீதியாக, பாசுமதி அரிசி பல நூற்றாண்டுகளாக இந்திய துணைக்கண்டத்தில் விளைவிக்கப்பட்டு வருகிறது. இந்த பெயர் சமஸ்கிருதத்தில் இருந்து உருவானது. இந்தியாவில் உத்தரகண்ட், பஞ்சாப் மாநிலங்களிலும் பாகிஸ்தானில் பஞ்சாப் சிந்து மாகாணங்களில் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.

உள்நாட்டில் அதிகரித்து வரும் தேவை மற்றும் தட்டுப்பாடு காரணமாக பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த காலக்கட்டத்தை பயன்படுத்தி, பாகிஸ்தான் சமீப காலத்தில் பாஸ்மதி அரிசி உற்பத்தியை அதிகரித்தது.

இதன் காரணமாக ஆண்டுக்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புக்கு பாஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு பாகிஸ்தான் முன்னேறியது. எனினும், உலகில் அதிகளவில் பாசுமதி அரிசியை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. ஆண்டுக்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புக்கு இந்தியா பாஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்கிறது.

பாஸ்மதி அரிசி விவகாரத்தில் பாகிஸ்தான் இந்தியாவை வேறு விதமாக குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 1965 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது, இந்திய ராணுவ வீரர்கள் ​​பாகிஸ்தான் விவசாயிகளிடம் இருந்து விதைகளை திருடினர். அந்த மதிப்பு மிக்க விதைகள்தான் பாஸ்மதி அரிசி என்று கூறுகிறது.

மேலும், பாகிஸ்தானில் இருந்து இந்திய வர்த்தகர்கள் பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்து பின்னர், அதை வேறு பேக்கிங்கில் ‘மேட் இன் இந்தியா ‘ என்று முத்திரை குத்தி வளைகுடா நாடுகளுக்கு அனுப்புவதாகவும் கூறி வருகிறது.

ஐரோப்பிய யூனியனில் இந்தியா தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்தால்தான் பாஸ்மதி அரிசிக்கான புவிசார் குறியீட்டை நாம் பெற முடியும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share