பாகிஸ்தான் ரயில் கடத்தல்… பணயக்கைதிகளின் நிலை என்ன?

Published On:

| By Selvam

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் கடத்தப்பட்ட சம்பவத்தில், பலூச் விடுதலை படை கிளர்ச்சியாளர்களால் பணயக்கைதிகளாக சிறை பிடிக்கப்பட்ட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவ லெஃப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி தெரிவித்துள்ளார். pakistan train hijack army

கடந்த மார்ச் 11-ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டில் பலுசிஸ்தான் போலான் மாவட்டம் அருகே ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பலூச் விடுதலை படை கிளர்ச்சி குழு கடத்தியது. ரயிலில் பயணித்த 450 பயணிகளை கிளர்ச்சி குழு பணயக்கைதிகளாக சிறைபிடித்தது. பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட பலூச் விடுதலை படை போராளிகள், ஆதரவாளர்களை 48 மணி நேரத்திற்குள் விடுவிக்காவிட்டால், அனைத்து பணயக்கைதிகளையும் தூக்கிலிடுவோம் என்று கிளர்ச்சி படை எச்சரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து பணயக்கைதிகள் அனைவரையும் பத்திரமாக மீட்கும் முயற்சியில், பாகிஸ்தான் ராணுவம், விமானப்படை மற்றும் உள்ளூர் போலீசார் தீவிரமாக களமிறங்கினர். கிளர்ச்சியாளர்களுடன் துப்பாக்கிச் சூடு நடத்தி அன்றைய தினம் இரவே 80 பயணிகள் மீட்கப்பட்டனர்.

இந்தநிலையில், நேற்றைய தினம் (மார்ச் 13) அனைத்து பணயக்கைதிகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், இந்த தாக்குதலில் ஈடுபட்ட 33 பிஎல்ஏ கிளர்ச்சி படையினர் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவ லெஃப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தன்யா செய்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “நேற்று மாலை இந்த தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பயங்கரவாதிகளும் அழித்தொழிக்கப்பட்டனர். பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 24 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த ஆபரேஷன் நேற்று மாலையுடன் வெற்றிகரமாக முடிந்தது. பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனத்தால் 21 பயணிகள் பலியாகியுள்ளனர். இந்த கொடூரமான செயலால் முழு தேசமும் அதிர்ச்சியடைந்துள்ளது.

அப்பாவி உயிர்களை இழந்திருக்கிறோம். இதுபோன்ற கோழைத்தனமான செயல்களால் பாகிஸ்தானின் அமைதிக்கான உறுதியை அசைக்க முடியாது” என்றார்.

தொடர்ந்து பணயக்கைதிகள் மீட்கப்பட்டது குறித்து அவர் பேசும்போது, “இராணுவம், விமானப்படை, எல்லைப் படை மற்றும் சிறப்பு சேவைகள் குழு கமாண்டோக்களின் பங்கேற்புடன் மீட்பு நடவடிக்கை உடனடியாகத் தொடங்கியது.

பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் உதவியாளர்கள் மற்றும் மூளையாக செயல்பட்டவர்களுடன் செயற்கைக்கோள் தொலைபேசிகள் மூலம் தொடர்பு கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் அவர்களுக்கு வெளிநாடுகளுடன் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தீவிரவாதிகள் பணயக்கைதிகளை மனித கேடயங்களாகப் பயன்படுத்தியதால், மிகவும் கவனமாக பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதனால் இந்த ஆபரேஷனை முடிக்க, பாதுகாப்புப் படையினருக்கு சற்று நேரம் ஆனது” என்று தெரிவித்துள்ளார். pakistan train hijack army

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share