பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்ய அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழல் மற்றும் ராணுவம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைவருமான இம்ரான் கான் மே 9 ஆம் தேதி இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜரானார். அன்றைய தினம் பாகிஸ்தான் ராணுவத்தால் நீதிமன்றத்திற்கு வெளியே இம்ரான்கான் கைது செய்யப்பட்டார்.
இதனால் அந்நாட்டில் பதற்றமான சூழல் நிலவியது. இம்ரான்கான் ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட போராட்டம் பல்வேறு இடங்களில் கலவரமாக வெடித்தது.
இந்த கலவரத்தில் இம்ரான்கான் ஆதரவாளர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். மேலும் ராணுவ கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தியது, பொதுச் சொத்துக்களுக்கு தீவைத்ததில் 5 பேர் கொல்லப்பட்டனர். இதுவரை 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இம்ரான் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த வழக்கினை இன்று (மே 11) விசாரித்த உச்சநீதிமன்றம், இம்ரான்கான் கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது என்றும் அவரை ஒரு மணி நேரத்திற்குள் உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் மாலை 4 மணியளவில், நீதிபதி உமர் அதா பண்டியல், நீதிபதி முகமது அலி மசார் மற்றும் நீதிபதி அதர் மினல்லா ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை அடுத்து பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு மேல் போலீசார் இம்ரான் கானை உச்சநீதிமன்றத்திற்கு அழைத்து சென்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இம்ரான்கானிடம் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உமர் அத்தா பண்டியல், வன்முறை போராட்டங்களை நீதிமன்றம் கண்டிக்கின்றது என்று கூறினார்.
இதற்கு இம்ரான்கான், “நான் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இருந்து தடிகளால் தாக்கப்பட்டுக் கடத்தப்பட்டேன். நான் கைது செய்யப்பட்ட பிறகு நாட்டில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது” என்று கூறினார்.
தொடர்ந்து இம்ரான்கான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என குறிப்பிட்ட நீதிபதி அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் நாளை (மே 12) இம்ரான்கான் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மோனிஷா
அரசியல் களத்தில் ஆளுநர் இறங்கக்கூடாது : உச்ச நீதிமன்றம்!
மோக்கா புயல்: தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை!