பாகிஸ்தான் அரசின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் இந்தியாவில் இன்று (அக்டோபர் 1) முடக்கம் செய்யப்பட்டது.
சமூக வலைத்தளத்தில் ’GovtOfPakistan’ என்ற பெயரில் பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கம் செயல்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் அரசு தனது செயல்பாடுகளை இந்த பக்கத்தில் அதிகாரபூர்வமாகப் பதிவிட்டு வருகிறது.
இந்நிலையில், ட்விட்டர் நிறுவனம் பாகிஸ்தான் அரசின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தை இன்று இந்தியாவில் முடக்கம் செய்துள்ளது.
இந்திய அரசின் சட்ட ரீதியான கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் இந்தியாவில் உள்ள ட்விட்டர் பயனர்களால் பாகிஸ்தான் ட்விட்டர் பக்கத்தில் உள்ள பதிவுகளை பார்வையிட முடியாது.
சட்டக் கோரிக்கைகள்
“ட்விட்டரில் நாட்டிற்கு எதிரானப் பதிவுகளைத் தடுப்பது குறித்து சமூக ஊடக பயனர்களின் கருத்துகளைக் கேட்கும் முதல் ஐந்து நாடுகளில் இந்தியா இந்த ஆண்டு தொடக்கம் முதலே இரண்டாவது இடத்திலிருந்து வந்தது” என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.
பத்திரிக்கையாளர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்குகளில் நாட்டிற்கு எதிராக இடுகையிடப்பட்ட பதிவுகளைத் தடை செய்யக் கோரி உலக நாடுகளிடமிருந்து, கடந்த 2021 ஆம் ஆண்டு கடைசி ஆறு மாதங்களில் 326 சட்ட ரீதியான கோரிக்கைகளைப் பெற்றதாகவும் ட்விட்டர் தெரிவிக்கின்றது.
இதில் இந்தியாவிலிருந்து மட்டும் 114 சட்டக் கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளதாகவும், இந்த கோரிக்கைகளின் அடிப்படையில், பாகிஸ்தான் ட்விட்டர் பக்கம் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் ட்விட்டர் தெரிவித்துள்ளது.
இது முதல் முறையல்ல
மேலும், இவ்வாறு பாகிஸ்தான் சமூக வலைத்தள பக்கம் இந்தியாவில் முடக்கப்படுவது முதல் முறை அல்ல. இந்த ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தான் அரசின்”ரேடியோ பாகிஸ்தான்” வானொலியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டது.
அதுமட்டுமில்லாமல், ஐக்கிய நாடுகள், எகிப்து, இரானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம், இந்தியாவிற்கு எதிரான கருத்துகளைப் பதிவிட்டதாக ஒரு ஃபேஸ்புக் கணக்கு மற்றும் 8 பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.
மத்திய அரசு இதுவரை, இந்தியாவிற்கு எதிராகக் கருத்து பதிவிட்டதாக 100 யூடியூப் சேனல்கள், 4 ஃபேஸ்புக் பக்கங்கள், 5 ட்விட்டர் கணக்குகள் மற்றும் 3 இன்ஸ்டாகிராம் கணக்குகளை தடை செய்துள்ளது.
மோனிஷா
சியோமி இந்தியா நிறுவனத்திடம் இருந்து ரூ.5,551.27 கோடி பறிமுதல் : ஏன்?
ரெப்போ வட்டி விகிதம் 4 வது முறையாக உயர்வு!