ஈரான் நாட்டின் மீது பாகிஸ்தான் இன்று (ஜனவரி 18) நடத்திய ட்ரோன் தாக்குதலில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி ஈரானின் சிஸ்தான் பலுசிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள ராஸ்க் காவல் நிலையத்தில், பாகிஸ்தானின் ஜெய்ஷ் அல் – தும் சன்னி தீவிரவாத அமைப்பினர் ட்ரோன் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 11 ஈரானிய காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஜனவரி 16-ஆம் தேதி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் ஜெய்ஷ் அல் தும் முகாம்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.
இதையடுத்து, ஈரான் தூதர் பாகிஸ்தானை விட்டு வெளியேற, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
ஈரான் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் இன்று பதிலடி தாக்குதலை தொடர்ந்துள்ளது. ஈரானின் சிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈரானின் தாக்குதல் மற்றும் பாகிஸ்தானின் பதிலடி தாக்குதலால், இரு நாட்டின் எல்லைகளிலும் பதட்டமான சூழல் நிலவுகிறது.
இன்று நடத்திய தாக்குதல் குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் மீது மிகவும் ஒருங்கிணைந்த மற்றும் குறிவைக்கப்பட்ட துல்லியமான ராணுவ தாக்குதல் இன்று காலை நடத்தப்பட்டது.
இந்த தாக்குதல் நடவடிக்கையானது, அச்சுறுத்தல்களில் இருந்து தேசத்தை பாதுகாப்பதற்கான பாகிஸ்தானின் உறுதியான வெளிப்பாடாகும்” என்று குறிப்பிட்டுள்ளது.
அதேபோல, பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவான இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) இந்த தாக்குதல் குறித்து கூறும்போது, “ஈரானின் சமீபத்திய தாக்குதலுக்கு காரணமான பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (பிஎல்ஏ) மற்றும் பலுசிஸ்தான் விடுதலை முன்னணி (பிஎல்எஃப்) ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் மறைவிடங்கள் மீது ட்ரோன்கள், ராக்கெட்டுகள், வெடிகுண்டுகள், மற்றும் ஆயுதங்கள் மூலம் இன்று தாக்குதல் நடத்தப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தாக்குதலால் ஈரானில் இதுவரை ஒன்பது பேர் உயரிழந்துள்ளதாக பாகிஸ்தானின் ஐஆர்என்ஏ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் எல்லைப் பகுதியான சிஸ்தான் பலுசிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் அதிகாலையில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, தெஹ்ரானில் உள்ள பாகிஸ்தான் தூதர் விளக்கம் அளிக்கக்கோரி ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்தநிலையில், பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் செய்தியாளர்களிடம் இன்று பேசியபோது, “இரு தரப்பினரும் தாக்குதலை கைவிடுவதன் மூலம் பதற்றம் அதிகரிப்பதை தவிர்க்க முடியும் என்று சீனா உறுதியாக நம்புகிறது. இதனால் பாகிஸ்தான், ஈரான் ஆகிய இரு தரப்பினரும் விரும்பினால் மத்தியஸ்தம் செய்ய சீனா தயாராக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
7 ஆண்டுகளுக்குப் பிறகு கொடநாடு செல்லும் சசிகலா
சென்னை வரும் பிரதமர் : பாதுகாப்பு பணியில் 22,000 போலீசார்!